பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இவர், கடந்த 2018 முதல் 2022ஆம் ஆண்டுவரை பிரதமராக இருந்தபோது வெளிநாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நினைவு மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் வழங்கப்பட்டிருந்தன. அந்தப் பொருட்களை அவர் விற்று, அதில் கிடைத்த பணத்தை மோசடி செய்ததாக இம்ரான் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது, உலகத் தலைவா்களிடம் இருந்து ரூ.14 கோடி மதிப்பிலான 58 பொருள்களைப் பெற்று இம்ரான் கான் இந்த ஊழலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
தோ்தல் ஆணையத்தால் தொடரப்பட்ட இந்த வழக்கை, இஸ்லாமாபாத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் கடந்த மே மாதம், ‘இம்ரான் கானை குற்றவாளி’ என உறுதி செய்து விசாரணை நீதிமன்றம் அறிவித்தது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் இம்ரான் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் இம்ரான் கானுக்கு எதிரான குற்றவியல் வழக்கின் தீா்ப்பு செல்லாது என கடந்த ஜூலை 4ஆம் தேதி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இம்ரான் கானுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் முறையிட்டது. இதை ஏற்றுக்கொண்ட உயா்நீதிமன்றம், செஷன்ஸ் நீதிமன்றம் மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது.
அதன்படி, இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது இம்ரான் கான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், அவர் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடையும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, அவா் உடனடியாக கைது செய்யப்பட்ட அவர், பாதுகாப்பு காரணங்களுக்காக அட்டோக் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 3 மாதங்களில் இம்ரான் கைது செய்யப்படுவது, இது 2வது முறையாகும். கடந்த மே மாதம் அல் காதிா் அறக்கட்டளை ஊழல் வழக்கில் இம்ரான் கைது செய்யப்பட்டார். அப்போது பாகிஸ்தானில் பெரும் கலவரம் வெடித்தது. இதில், ராணுவம் மற்றும் அரசின் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
தற்போது இந்த கைது நடவடிக்கைக்கு முன்பு இம்ரான் கான் வெளியிட்ட வீடியோ ஒன்றில், ‘தெருக்களில் இறங்கி தொண்டர்கள் போராட வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் பெரிய அளவில் போராட்டம் எதுவும் நடைபெறவில்லை. இதற்குக் காரணம் கடந்த முறை நடந்த வன்முறையில் பல தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் கட்சியைவிட்டே விலகி விட்டனர். இதனால் தொண்டர்கள் போராட்டத்தில் இறங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவரைச் சந்திக்க போலீசார் அனுமதி மறுப்பதாக இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ- இன்சாப் கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். 'சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரானை சந்திக்க பஞ்சாப் மாகாண உள்துறை செயலரிடம் முறையாக விண்ணப்பித்தோம். இருப்பினும், அவரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது. கட்சித் தலைவரிடம் சட்ட ஆவணங்களில் கையொப்பம் வாங்குவதற்காகச் சட்ட வல்லுநர்கள் முறையிட்டபோதும் சிறை அதிகாரிகள் அனுமதி தர மறுக்கின்றனர்' என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இம்ரான் கான் இல்லாத நிலையில், அக்கட்சியை வழிநடத்தும் ஷா மஹ்மூத் குரேஷி, ''அமைதியான போராட்டம் எங்கள் உரிமை. எந்த அரசு சொத்துக்கும் சேதம் ஏற்படுத்தக் கூடாது. யாரும் சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டாம்” என தொண்டர்களை எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானைப் பொறுத்தமட்டில் விரைவில் அங்கு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் இம்ரான் கான் செயல்பட்டு வந்த நிலையில்தான் இம்ரானின் கைது நடைபெற்றுள்ளது. இந்த கைது நடவடிக்கை அவரையும், அவரது கட்சியினரையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. 2 ஆண்டுகள் அதற்குமேல் தண்டனை பெற்றால் 5 ஆண்டுகளுக்கு எந்தவித அரசியலமைப்புப் பதவியையும் வகிக்கக் கூடாது என்ற பாகிஸ்தானின் சட்டத்தால், இம்ரான் கான் 5 ஆண்டுகளுக்கு தோ்தலில் போட்டியிட முடியாது. எனினும், தண்டனையை எதிா்த்து அவா் மேல்முறையீடு செய்யலாம்.
இம்ரான் கான் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்றார். அவரது தலைமையிலான கூட்டணியிலிருந்து முக்கியக் கட்சி ஒன்று விலகியதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் இம்ரான் கான் பதவியை இழந்தார். இதைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.
பின்னர், அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியைச் சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பிரதமராகப் பதவியேற்றார். தற்போது ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் இம்ரான் கான் பதவி இழப்புக்குப் பிறகு அவர்மீது ஊழல், மோசடி, கொலை, பயங்கரவாதம், தேசத் துரோகம் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பான வழக்குகளில் அவர் விசாரணைக்கு ஆஜராகாத சமயத்தில், அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு வழங்கியபோது, அதற்கு எதிராக அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தச் சமயங்களில் காவல் துறைக்கும் இம்ரான் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.