புல்வாமா பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதர் சோஹைல் முகமதை பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆலோசனைக்காக பாகிஸ்தான் அழைத்துள்ளது.
காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட ஜெயிஷ் இ முகம்மது அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோஹைல் முகம்மதுவை வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே சம்மன் அனுப்பினார். இதையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் அலுவலகத்தில் ஆஜரான சோஹைல் முகம்மதுவிடம், தாக்குதல் சம்பவத்துக்கு கடுமையான கண்டனத்தை இந்தியா தெரிவித்தது.
அதன்பிறகு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி அஜய் பிசரியாவை டெல்லிக்கு வருமாறு மத்திய அரசு அழைத்தது. புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரமான தாக்குதல் குறித்து ஆலோசனை செய்யவே அவரை மத்திய அரசு அழைத்திருந்தது.
இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதர் சோஹைல் முகம்மதுவை அழைத்துள்ளது. இந்த தகவலை பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது ஃபைசல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் “பாகிஸ்தானின் தூதரை ஆலோசனைக்காக பாகிஸ்தான் அழைத்துள்ளோம். அவர் இன்று காலை டெல்லியில் இருந்து பாகிஸ்தான் புறப்பட்டார்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.