பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற அந்நாட்டு அமைச்சரவை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்து வரும் நவாஸ் ஷெரீஃப் பல்வேறு உடல் நலக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ளார். அவரை லண்டன் அழைத்துச் சென்று சிகிச்சை தர வேண்டும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இந்நிலையில் சிகிச்சைக்கு பின் நாடு திரும்பவேண்டும் என்றும் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சந்திக்க வேண்டும் என்ற இரு நிபந்தனைகள் கொண்ட உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் நவாஸ் ஷெரீஃப் வெளிநாடு செல்ல அனுமதி அளிப்பதாக இம்ரான் கான் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமையே நவாஸ் ஷெரீஃபை லண்டன் அழைத்து செல்ல முடிவாகியிருந்தது. ஆனால் வெளிநாடு செல்ல அனுமதி இல்லாதவர்கள் பட்டியலில் நவாஸ் ஷெரீஃப் பெயர் இருந்ததால் அவர் விமானத்தில் ஏற்ற அனுமதிக்கப்படவில்லை.