பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மேம்படுத்தி வரும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து 56 முதல் 69 மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவின் ஃபைசர், மாடர்னா ஆகிய மருந்து நிறுவனங்கள் 95 சதவிகிதம் வரை திறம்பட நோயை எதிர்ப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் மருந்தும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தச் சூழலில், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழம் மேம்படுத்தி வரும் தடுப்பு மருந்தும் சிறப்பான முறையில் செயலாற்றுவதாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. ஆரோக்கியமான 560 பேரிடம் ஆக்ஸ்போர்டின் தடுப்பு மருந்து செலுத்தியதில், இளம் வயதுடையவர்களை விட, முதியவர்களின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்திருப்பது உறுதியாகி இருக்கிறது. குறிப்பாக 59 முதல் 69 வயது மற்றும் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு நோயெதிர்ப்பு திறனை அதிகரிப்பதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனாவால் முதியவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வரும் சூழலில், ஆக்ஸ்ஃபோர்டு மருந்தின் இந்த செயல் திறன் இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்ததாக நோயில் இருந்து பாதுகாப்பதற்கான சோதனையை நடத்தப்போவதாக ஆகஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வில் இடம் பெற்றிருக்கும் மகேஷி ராமசாமி தெரிவித்துள்ளார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற பெயரில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.