ஜிம்பாப்வே, மொசாம்பிக், மலாவி ஆகிய நாடுகளை தாக்கிய இடாய் புயலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 732 ஆக உயர்ந்துள்ளது.
ஜிம்பாப்வே, மொசாம்பிக், மலாவி ஆகிய நாடுகளில் கடந்த 15 ஆம் தேதி இடாய் புயல் கடுமையாகத் தாக்கியது. புயல் காற்று மற்றும் கனமழையால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மரங்கள், தொலைத்தொடர்பு கம்பங்கள் சாய்ந்தன. வீடுகளின் கூரைகள் பிய்த்தெறியப் பட்டன. புயலுக்கு இதுவரை 732 பேர் உயிரிழந்துள்ளனர். 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புயலில் மொசாம்பிக் நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் 417 பேர் உயிரிழந்துள்ளனர். ஜிம்பாப்வே-யில் 259 பேரும் மலாவியில் 56 பேரும் உயிரிழந்துள்ளனர்.
புயல் பாதிப்பை அடுத்து அந்நாடுகளுக்கு உதவுவதற்காக இந்திய கடற்படையைச் சேர்ந்த ஐஎன்எஸ் சுஜாதா, ஐசிஜிஎஸ் சாரதி, ஐஎன்எஸ் ஷர்துல் ஆகிய 3 கப்பல்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த கப்பல்கள் மிஸோம்பி புயலில் சிக்கிய 192 பேரை காப்பாற்றியுள்ளது. இந்திய கடற்படை நடத்திய மருத்துவ முகாமில் ஏராளமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இன்னும் புயல் வீச இருப்பதாகவும் கனமழைய பொழிய இருப்பதாகவும் கூறப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல பகுதி களில் மக்கள் உணவு மற்றும் குடிதண்ணீர் இன்றி அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது.