கொரோனா பாதிப்பு: உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கொரோனா பாதிப்பு: உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
கொரோனா பாதிப்பு: உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
Published on

கொரேனாவிற்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவதொடங்கிய வுஹான் மாகாணத்தில் அதன் தாக்கம் கட்டுக்குள் வந்திருப்பதாக சீன அதிபர் ஷி ஜின் பிங் தெரிவித்துள்ளார். ஈரானில் ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் ஈரானில் 70 ஆயிரம் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சர்வதேச விமான நிலையங்களை இயக்கிவரும் விமான நிலைய தலைவருக்கும், அந்நாட்டின் கலாச்சார அமைச்சர் ஃபிராங் ரைஸ்டருக்கும் கொரோனா பாதிப்பு ஏ‌ற்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அச்சத்தால், பொதுஇடங்களில் மக்கள் கூடுவதற்கு ஸ்பெயின் அரசு தடை விதித்துள்ளது. உலக புகழ்பெற்ற லா லீகா கால்பந்து தொடரை ரசிகர்களே இல்லாமல் நடத்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. முதன்முறையாக ஆரவாரமே இல்லாமல் அமைதியான முறையில் போட்டி நடைபெறவுள்ளது. கொரோனா காரணமாக ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டால் ஜப்பான் மிகப்பெரிய பொருளாதார சரிவை சந்திக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜெர்மனியில் 60 முதல் 70 சதவிகிதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் குழந்தைகளை விட முதியவர்களையே அதிகம் பாதித்திருப்பது உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவில் 2.4 சதவீத குழந்தைகளே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களில் 0.2 சதவீத குழந்தைகளே மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரீஸ்க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். இலங்கையில் 52 வயதுடைய நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உயிரிழப்புகள் 4 ஆயிரத்து 300 ஐ தாண்டியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சீனாவில் மட்டும் 3ஆயிரத்து 158 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு ‌80 ஆயிரத்து 778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 631 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரேனா உள்ளது. ஈரானில் 291 பேரும், தென் கொரியாவில் 60 பேரும், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் 30க்கும் அதிகமானோரும், அமெரிக்காவில் 29 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com