மெக்சிகோவில் குவியல் குவியலாக மனித எலும்புக் கூடுகளை போலீசார் கண்டுபிடித்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவின் வடக்கு தலைநகரத்தில் உள்ள வரலாற்று மையப் பகுதி டெபிடோ. இந்த இடம் சமூக விரோத நடவடிக்கைகளின் இதயமாக செயல்பட்டு வருகிறது. போதை பொருள் கடத்தல் சம்பந்தமான நடவடிக்கைகள் இங்கே அதிகம். இந்தப் பகுதியில் அருகேதான் போலீசார் நடத்திய சோதனையில் மனித எலும்புக் கூடுகளும், மலை போல் குவித்து வைத்து புதைக்கப்பட்டிருந்த மனித மண்டையோடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் கண்ணாடி குடுவைக்குள் மறைத்து வைப்பட்ட மனித எலும்கூடுகளும் கிடைத்துள்ளன. சில தினங்களுக்கு முன் காவல்துறையினர் சட்டவிரோதமான போதை விவகாரம் சம்பந்தமாக 31 நபர்களை கைது செய்தனர். அந்த நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியிருந்தனர். ஆனால் அதில், 27 பேர்களை நீதிமன்றம் விடுவிட்டது.
இந்நிலையில்தான் மெக்சிகோ அரசுத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட புகைப்படம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் பலி பீடம் ஒன்றில் சில மண்டை ஓடுகளும் அதைச் சுற்றி உள்ள சுவரில் முகமூடி அணிந்த சில முகங்களும் வரையப்பட்டிருந்தன. இந்தக் காட்சி சார்ந்த புகைப்படம் ஊடகங்கள் வழியே பரவியது.
இது சம்பந்தமாக அரசுத் தலைமை வழகறிஞர் அலுவலகத்தின் பெண் அதிகாரி ஒருவர் சில விவரங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர், 42 மனித மண்டை ஓடுகளும் சில எலும்புகளும் கண்டறியப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் சில அதிகாரிகள் 40 தாடை எலும்புகளும் 30 கால் எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த பலி பீடம் ஏன் உருவாக்கப்பட்டது? இந்த மண்டை ஓடுகள் எதனால் வந்தன? சமூக விரோதமாக யாரேனும் கொன்று புதைக்கப்பட்டனரா? போதை கடத்தல் விவகாரத்திற்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா என பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். ஆனால் இந்தச் சம்பவம் மெக்சிகோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.