அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் பால்டிமோர் நகரில் உள்ள தலைமை தேவாலயம் மற்றும் அதன்கீழ் செயல்படும் தேவாலயங்கள், பள்ளிகளில் கடந்த 1940-ம் ஆண்டு முதல் சுமார் 600-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியதாகவும், இந்த பாலியல் துன்புறுத்தலில் 156 மதகுரு உறுப்பினர்கள் ஈடுபட்டதாகவும் கடந்த மாதம் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தநிலையில், தற்போது இலினோயிஸ் மாகாணத்திலும் இந்தப் புகார் எழுந்துள்ளது.
அதன்படி, 70 ஆண்டுகளுக்கும் மேலாக இலினோயிஸ் மாகாணத்தில் உள்ள சிகாகோ நகரம் உள்ளிட்ட 6 நகரங்களில், கடந்த 1950-ம் ஆண்டு முதல் இந்த சம்பவம் நடந்து வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. சுமார் 1997 சிறுவர், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், இதில் மதகுரு உறுப்பினர்கள் 451 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் அரசு நடத்தி வரும் இந்த விசாரணைக்கு முன்னதாக, தேவாலாயம் சார்பில் பாலியல் துஷ்பிரயோகம் குறித்து வெளியிட்ட தகவலைவிட 4 மடங்கு அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.
696 பக்கங்கள் நிறைந்த விரிவான விசாரணை அறிக்கையின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. 450-க்கும் மேற்பட்ட மதகுரு உறுப்பினர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இலினோயிஸ் அரசு வழக்கறிஞர் குவோம் ரௌல் செய்த விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, 11 முதல் 17 வயதுடையவர்களே இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளும் புகார் தெரிவித்து வருகின்றனர்.