நாள்தோறும் 140 அமெரிக்கர்களை கொன்றுவரும் வலி நிவாரணிகள், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பொது சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். இந்தப் பிரச்னை ஒரு தேசிய அவமானம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிகப்படியான வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வதால் அமெரிக்காவில் அகால மரணங்கள் என்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. துப்பாக்கிச் சூடு, சாலை விபத்துகளை காட்டிலும் இந்த பழக்கத்தால் உயிரிழப்போர் எண்ணிக்கை கூடுதலாக இருக்கிறது.
உலக அளவில் வலி நிவாரணிகள், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாவோர் எண்ணிக்கை அமெரிக்காவில்தான் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. நகரம், கிராமம் என பாரபட்சமின்றி அந்நாட்டில்தான் அளவுக்கு அதிகமானோர் போதை பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாகி வாழ்வை தொலைத்து வருவதாக கூறப்படுகிறது. தொற்று நோய் மூலம் பரவி வரும் இந்தப் பழக்கத்துக்கு கடந்த 2015 ஆம் ஆண்டில் மட்டும் 33000 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர்.
இதனால் போதைப் பொருள் பழக்கம் என்பது அமெரிக்காவில் தேசிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இப்பிரச்னையை எதிர்கொள்ள தேசிய அவசர நிலையை பிரகடனப்படுத்தப் போவதாக தெரிவித்திருந்த அதிபர் ட்ரம்ப் தற்போது உயிரிழப்புகளை தடுக்க சுகாதார துறையை முடுக்கிவிட்டுள்ளார். மேலும் பொது சுகாதார அவசர நிலையையும் பிரகடனம் செய்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் இந்த விவகாரம் குறித்து பேசிய அவர், அமெரிக்காவில் சாலை விபத்துகள், துப்பாக்கிச் சூடுகளால் நிகழும் மரணங்களை விட, போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் தான் அதிக மரணங்கள் நிகழ்கின்றன. உலக அளவில் போதைக்காக வலி நிவாரணிகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அமெரிக்காவில்தான் அதிகம் காணப்படுகிறது. போதை மருந்துகளால் ஏற்படும் மரணத்தை தடுக்க மாகாண அரசுகளுக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும். இதன் மூலம் சுகாதார துறை அதிகப்படியான ஆட்களை பணியமர்த்தி போதை பழக்கத்தில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட முடியும். குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.