உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடிவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. குழந்தைகள் வீட்டில் உள்ள நிலையில், திறந்தவெளியில் வகுப்புகளை நடத்தும் புதுமை எண்ணம் எழுந்துவருகிறது.
கலிபோர்னியாவின் தெற்குப் பகுதியில் உள்ள சிறிய உண்டு உறைவிடப் பள்ளியில் திறந்தவெளி வகுப்பறைகளைத் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே சான்டா பார்பராவில் லாஸ் ஒலிவியாஸ் நகரில் அமைந்துள்ள மிட்லேண்ட் பள்ளி திறந்தவெளி வகுப்புகளை நடத்திவருகிறது.
இந்த பள்ளி வளாகம் 2800 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. மரங்கள் அடர்ந்த பகுதியில் இயற்கையான பின்னணியில் பாடங்களைப் படிக்க யாருக்குத்தான் பிடிக்காது. திறந்த வெளியில் முகக்கவசத்துடன் சமூக இடைவெளியுடன் வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஒரு வகுப்பில் 85 மாணவர்கள் கலந்துகொள்வார்கள்..
மிட்லேண்ட் பள்ளி முதல்வர் கிறிஸ்டோபர் பார்னஸ், “ இது மிகவும் உற்சாகமாகவும் பயமூட்டுவதாகவும் உள்ளது. மீண்டும் பள்ளி வளாகத்திற்கு மாணவர்களை அழைத்துவருவது உள்பட திறந்தவெளி வகுப்புகளை நடத்துவதில் நிறைய சவால்கள் இருப்பதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம். அடிப்படை வசதிகள் மற்றும் உணவு ஏற்பாடு செய்யவேண்டும். திறந்தவெளியில் வகுப்புகளை நடத்தினாலும் சமூக இடைவெளியையும் மாணவர்களிடையே பின்பற்றவேண்டும். அந்த வகுப்புகளைத் தொடர ஆச்சரியத்துடன் இருக்கிறோம்” என்கிறார் கிறிஸ்டோபர்.
தூய்மை மற்றும் பராமரிப்புப் பணியாளர்கள் பள்ளியில் கிடையாது என்பதால், மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களுக்கான உணவையும் குளிப்பதற்கான நீரையும்கூட அவர்களேதான் தயாரித்துக்கொள்ளவேண்டும். மீண்டும் பள்ளிக்குச் செல்வதில் மிட்லேண்ட் பள்ளி மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.