சீனாவில் உள்ள 45 பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் ஆங்கில வழியில் மருத்துவ படிப்புகளை நடத்துவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இது, இந்தியாவிலிருந்து சீனா செல்லும் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
சீனாவில் உள்ள 250க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுவதால், ஏராளமான இந்திய மாணவர்கள் அங்கு சென்று மருத்துவம் படித்து வருகின்றனர். இதன்படி, கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும், 21 ஆயிரம் இந்தியர்கள் சீனாவில் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக, சீனாவில் உள்ள 45 பல்கலைக்கழகங்களில் மட்டும் ஆங்கில வழியில் மருத்துவப்படிப்புகளை நடத்துவதற்கு அந்நாட்டு கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
பல்கலைக்கழகங்கங்களில் சீன மொழியில் மட்டுமே மருத்துவக் கல்வி அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், சீன மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் மருத்துவம் கற்பிப்பதற்கும் தடைவிதித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 45 பல்கலைக்கழகங்கள் தவிர, பிற பல்கலைக்கழகங்களில் சேரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு, சீன மொழி வழியில் படித்ததற்கான சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வியாண்டில் ஏராளமான இந்திய மாணவர்கள் சீனாவுக்கு மருத்துவம் படிக்க முயற்சித்து வரும் நிலையில், சீன அரசின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு இந்தியாவிலிருந்து சீனா செல்லும் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது