உக்ரைனில் போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவைக் கேலி செய்யும் வகையில், அந்நாட்டு அரசு ஒன்று புதிய தபால் தலை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர், கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியுடன் ஒரு வருடத்தை நிறைவு பெற்றுள்ளது. என்றாலும், இருதரப்பிலும் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறாத நிலையில், தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் நிதியுதவியும் ஆயுதங்களும் அளித்து வருகின்றன. அதேநேரத்தில், இப்போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த சூழலில், சமீபத்தில் உக்ரைனில் இருந்து ரஷ்ய ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐ.நா. பொது சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 141 நாடுகள் ஆதரவாகவும், 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா உள்பட 32 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.
இந்த நிலையில், ரஷ்யாவின் ஒரு வருட போரை நினைவுகூரும் வகையில், உக்ரைன் அரசு புதிய தபால் தலை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஜூடோ போட்டியில் ஒரு சிறுவனிடம் தோற்பதாக, அதாவது அவரை அடித்து கீழே சாய்ப்பதாக, தபால் தலை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது, அம்மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த தபால் தலையில் இடம்பெற்றிருக்கும் ஓவியத்தை, உக்ரன் நகரில் வசிக்கும் ஓவியர் சமீபத்தில் சுவரோவியமாக வரைந்திருப்பதாகவும், அதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கிலேயே, தற்போது தபால் தலையாக வெளியிடப்பட்டிருக்கிறது எனக் கூறப்படுகிறது. இதை வாங்கிய நபர் ஒருவர், “உக்ரைனின் நிலவரம் இதன்மூலம் உலக மக்களுக்குப் புரிகிறது. நாங்கள் கவனம் ஈர்த்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
அதுபோல் அந்நாட்டின் மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட டாலர் நோட்டிலும் ரஷ்யாவை கேலி செய்து நோட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த நாட்டின் 20-ஹ்ரிவ்னியா ($0.54) என்ற நோட்டின் பின்புறத்தில் உக்ரைன் ராணுவ வீரர்கள் மூன்று பேர் நாட்டின் தேசியக் கொடியை ஏற்றியபடியும், மறுபுறத்தில் இரண்டு கைகள் கட்டப்பட்ட படமும் அச்சிடப்பட்டுள்ளது. இது, ரஷ்யப் படைகள் போர்க் குற்றம் புரிந்ததற்கான அடையாளம் என விமர்சனம் எழுந்து வரும் நிலையில், அதற்கு அந்நாட்டு அரசு மறுப்பும் தெரிவித்துள்ளது.
- ஜெ.பிரகாஷ்