பிரசவத்தின்போது ஒவ்வொரு 16 நொடிக்கும் ஒரு குழந்தை உயிரிழக்கிறது: ஐநா கவலை
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் இருபது லட்சம் குழந்தைகள் பிரசவ காலத்தில் உயிரிழப்பதாகவும், குழந்தைப் பிறப்புக்கு முன்பான மருத்துவப் பராமரிப்புகள் முறையாக இல்லை என்றும் ஐநா கவலை தெரிவித்துள்ளது. அதாவது, ஒவ்வொரு 16 நொடிக்கும் ஒரு குழந்தை உயிரிழக்கிறது. கொரோனா தொற்று காரணமாக சர்வதேச அளவில் குழந்தை இறப்பின் எண்ணிக்கை 2 லட்சமாக அதிகரிக்கும் எனவும் ஐநா சுட்டிக்காட்டியுள்ளது.
குழந்தை உயரிழப்புகளில் 84 சதவீதம், மிகக் குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில்தான் நடந்துள்ளது. செவிலியர் பற்றாக்குறை, மருத்துவ வசதியின்மை காரணமாக அவை நிகழ்ந்திருப்பதாக யுனிசெப், உலக சுகாதார அமைப்பு மற்றும் உலக வங்கிக் குழுவும் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
கர்ப்பகாலத்தில் பெண்களுக்கான மருத்துவப் பாதுகாப்பு வசதிகள் பெருகினால் நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்க்கையைக் காப்பாற்றலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பிறக்கும்போதோ அல்லது கர்ப்ப காலத்திலோ ஒரு குழந்தையை இழப்பது என்பது ஒரு குடும்பத்திற்கு மிகப்பெரும் சோகம். பெரும்பாலும் அது அமைதியாக சகித்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் உலகம் முழுவதும் அடிக்கடி நிகழ்கிறது" என்கிறார் யுனிசெப் நிர்வாக இயக்குனர் ஹென்றிட்டா ஃபோர்.
உலக நாடுகளில் அரசுகள் அவசரகால நடவடிக்கை எடுக்காவிட்டால், 2030 ஆம் ஆண்டில் மேலும் 20 மில்லியன் குழந்தைகள் உயிரிழக்கும் என்றும் ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. சஹாரா ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தெற்காசிய பகுதிகளில் பாதி அளவிலான குழந்தை உயிரிழப்புகள் பிரசவ வலி ஏற்படும்போது நிகழ்கின்றன. அதனுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் மட்டுமே ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளில் ஏற்படுவதாக ஐநா குறிப்பிட்டுள்ளது.
தரமான மருத்துவச் சிகிச்சை, அனுபவமிக்க செவிலியர்கள் இருந்தால் கர்ப்பக்காலம் மற்றும் மகப்பேறின்போது ஏற்படும் தேவையற்ற உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம் என்றும் அந்த அறிக்கையில் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.