ஒலிம்பிக் போட்டிக்காக கட்டியிருந்த விளையாட்டு மைதானத்தை, கொரோனா சோதனை மையமாக மாற்றியிருக்கிறது தென்கொரியா. வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புபவர்களில் தினசரி ஆயிரம் பேருக்கு இங்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
தென்கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்திருக்கிறது. அந்நாட்டு அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கை காரணமாக தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நூறுக்குள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால், கடந்த இரு வாரங்களில் மட்டும் 508 பேர் பாதிக்கப்பட்டதாக தென்கொரிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது வரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் 92 சதவிகிதம் பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், எஞ்சிய 8 சதவிகிதம் பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 1988 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிக்காக சியோலில் கட்டப்பட்ட விளையாட்டு மைதானத்தை, கொரோனா நோய் தடுப்புக்கான தற்காலிக பரிசோதனை மையமாக தென்கொரிய அரசு மாற்றியுள்ளது. சர்வதேச நாடுகளில் இருந்து திரும்புபவர்களில், ஆயிரம் பேருக்கு தினசரி இங்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
கடந்த மாதம் வரை அறிகுறி இருப்பவர்களை மட்டுமே விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி தென் கொரிய அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். ஆனால், தற்போது நோய் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக விமான நிலையத்தில் வந்திறங்கும் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்ற பரிசோதனையை செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது.
தவிர உள்நாட்டிலும் கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விதிகளை மீறி, பொதுவெளியில் வந்தால் அவர்களுக்கு 2 ஆயிரத்து 440 அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்படுகிறது. மேலும், ஓராண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை தென்கொரியாவில் 27 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.