வெனிசுலா நாட்டைச் சேர்ந்த வாள்சண்டை ஒலிம்பிக் வீரர் ரூபன் லிமார்டோ(35 வயது). அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தயாராகிவரும் இவர், தனது புது வேலையைப் பற்றி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
வாரத்தில் 5 நாட்கள் காலையில், வெனிசுலாவைச் சேர்ந்த வாள்சண்டை வீரர்கள் சுமார் 20 பேர் ஒரு பழைய தொழிற்சாலைக்கு அருகில் ஒன்றுகூடுகின்றனர். மதியம் வரை தீவிர பயிற்சியில் ஈடுபடும் அவர்கள், மதியம் 1 மணிக்கு தங்கள் பைக்கில் வைத்திருக்கும் பச்சைநிற பைகளுடன் வேலைக்கு செல்கின்றனர்.
தாங்கள் செய்யும் வேலைபற்றி ரூபன் கூறுகையில், ‘’கொரோனா பரவல் காரணமாக வெனிசுலா நாட்டு அரசிடமிருந்து எங்களுக்கு வரும் உதவித்தொகை குறைந்துவிட்டது. டோக்கியாவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக்கும் அடுத்த ஆண்டிற்கு மாற்றிவைக்கப்பட்டுள்ளதால், ஸ்பான்ஸர்களும் அடுத்த ஆண்டிலிருந்து உதவுவதாகக் கூறிவிட்டனர்.
எனவே எங்கள் அன்றாடத் தேவைகளுக்கு நாங்கள் ஊபர் நிறுவனத்தின் உணவு விநியோகிக்கும் தொழிலில் இறங்கியுள்ளோம். தினமும் குறைந்தது 50 கி.மீ சுற்றளவுக்குச் சென்றுவருகிறோம். இதனால் வாரத்திற்கு சுமார் 100 யூரோ சம்பளமாக கிடைக்கிறது. இது எங்கள் பயிற்சிக்கு உதவியாக இருக்கிறது. சம்பளம் வாங்கும்போதெல்லாம் 2021ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள போட்டியில் மெடல் வாங்குவதற்கு இது உதவியாக இருக்கும் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்’’ என்கிறார்.
எட்டு வருடங்களுக்கு முன்பு ஒலிம்பிக் பதக்கம் வாங்கிய இவர்தான், 44 வருடங்களுக்குப் பிறகு, லத்தீன் அமெரிக்காவில் வாள்சண்டையில் ஒலிம்பிக் தங்க பதக்கம் வாங்கிய முதல் நபர் என்ற பெருமைக்குரியவர்.