இங்கிலாந்தின் மெர்சிசைடு சிட்டியின் பென்ஸ்பை பகுதியில் வசிக்கும் எம்மா மற்றும் வேட்டி டெய்லர் தம்பதியின் தற்போது 3 வயதாகும் மகன் ஆலிவர் டெய்லர், உணவை உட்கொள்ள பயந்து ஒருவருடமாக சாப்பிடாமல இருந்துவருகிறார். இச்சிறு குழந்தை தன்னுடைய 2 வயதில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பு என்ற நோயால் மருத்துவரீதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளார். உணவை பார்த்தாலே அதிகமாக பயப்படும் ஆலிவர் டெய்லர், கடைசியாக வாய்வழியாக உணவை உட்கொண்டு 17 மாதங்கள் ஆகிறதாக சொல்லப்படுகிறது.
சிறுவன் ஆலிவர் டெய்லருக்கு இரண்டு வயதாக இருந்தபோது மருத்துவரீதியாக ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீர்ச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. உணவை பார்த்தாலே அதிகமாக பயப்படும் ஆலிவர், கடந்த 2023-ம் ஆண்டு முழுவதும் இரவு 10 மணிநேரமும், பகலில் நான்கு மணிநேரமும் இயந்திரங்களைப் பயன்படுத்தி மட்டுமே உணவருந்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். ஆலிவர் இன்னும் தனது உணவு மற்றும் பானங்கள் அனைத்திற்கும் காஸ்ட்ரோஸ்டமி குழாயையே நம்பியிருக்கிறார். அவர் வாயால் எதையும் சாப்பிட்டு 17 மாதங்கள் ஆகிவிட்டன.
ஆலிவர் டெய்லர், ARFID எனப்படும் உணவு உட்கொள்வதை தவிர்க்கும் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உண்ணும் கோளாறுகள் உள்ளவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனமான பீட்டின் கருத்துப்படி, ARFID என்பது சில உணவுகளைத் தவிர்ப்பது அல்லது ஒட்டுமொத்தமாக குறைந்த உணவை உண்ணும் நிலையாகும்.
இங்கிலாந்தின் மெர்சிசைடு பகுதியின் பென்ஸ்பையை சேர்ந்த ஆலிவரின் அம்மா மற்றும் அப்பாவான எம்மா மற்றும் மேட்டி டெய்லர் இருவரும், தங்களுடைய குழந்தை போன்ற மற்ற குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தங்கள் மகனின் கதையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். இது ஆலிவர் போன்ற குழந்தைகளுக்கு அதிக உதவி செய்ய வழிவகுக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
ARFID எனப்படும் அரியவகை பிரச்னை குறித்து அதிகமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கும் சிறுவன் ஆலிவரின் தாய் எம்மா, “நாங்கள் ARFID பற்றிய விழிப்புணர்வை அவசரமாக அதிகரிக்க விரும்புகிறோம், அதன்மூலம் இதைப்பற்றி மற்ற பொற்றோர்களால் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். சிலர் கூறுவார்கள் பசியெடுத்தால் அவர்களாகவே சாப்பிடுவார்கள் என்று, ஆனால் ஆலிவர் பசித்தாலும் சாப்பிட மாட்டார் பட்டினி கிடப்பார். சில தவறான கூற்றுகளுக்கு இடையில், ஒரு நபரின் உடல் அளவு மற்றும் வடிவ மாற்றம் போன்ற விசயங்கள் மூலம் ARFID பாதிப்பு ஏற்படாது.
இது உணர்ச்சிப் பிரச்சினைகள் மற்றும் பயத்தைப் பற்றியது. ஆலிவர் உணவைப் பற்றி முற்றிலும் பயப்படுகிறார். முதலில் NG குழாய் மூலம் ஆலிவருக்கு நான்கு மாதங்கள் உணவளித்த பிறகு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஆலிவர் வயிற்றில் நிரந்தரமாக குழாய் பொருத்தப்பட்டுள்ளது" என்ற அதிர்ச்சிகரமான தகவலை எம்மா தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "ஆமாம், ஆலிவர் கடந்த 12 மாதங்களில் தனது உடல் எடையில் மூன்றில் ஒரு பங்கை ட்யூப் ஃபீடிங் மூலம் மட்டுமே பெற்றுள்ளார். இதனால் அவருக்கும் எங்கள் குடும்பத்திற்கும் ஏற்படும் பாதிப்பை உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடியும் என நினைக்கிறேன். அவர் இன்னும் உணவைப் பற்றி மிகவும் கஷ்டப்படுகிறார், அதன்மூலம் குடும்ப உணவுகள் மற்றும் பிறந்தநாள் விழாக்கள் போன்ற பல விஷயங்களை நாங்கள் இழக்கிறோம்" என்று தெரிவித்துள்ளதாக மிர்ரர் மேற்கோள் காட்டியுள்ளது.
மேலும், ஆலிவர் ஒவ்வொரு மாதமும் ஒரு நிபுணத்துவ உணவியல் நிபுணரைப் பார்ப்பதாகவும், அவர்கள் உணவின் மீது ஆலிவரின் பயத்தை சமாளிக்க உதவி செய்து வருகிறார்கள் என்றும் எம்மா தெரிவித்துள்ளார். ஆனாலும் ஆலிவருக்கு உலகிலேயே மிகவும் பயங்கரமான விஷயம் என்றால் அது உணவுதான் என்று எம்மா தெரிவித்துள்ளார். ஆலிவர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்துவருவதாக தெரிவித்துள்ளார்.