பிரிட்டன் பிரதமராக வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட இந்திய வம்சாவளி எம்.பி. சுனக் ரிஷியின் சர்ச்சை வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் பிரதமராக பதவி வகித்த போரிஸ் ஜான்சன் மீது ஏராளமான முறைகேடு புகார்கள் எழுந்தன. குறிப்பாக, கொரோனா ஊரடங்கு சமயத்தின் போது தனது இல்லத்தில் அரசு அதிகாரிகளுக்கு விருந்து கொடுத்தார் போரிஸ் ஜான்சன். ஒரு நாட்டின் பிரதமரே அரசாங்க கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த லண்டன் நீதிமன்றம், போரிஸ் ஜான்சனுக்கு அபராதம் விதித்தது. இதனால் 'பதவியில் இருக்கும் போதே அபராதம் விதிக்கப்பட்ட முதல் பிரதமர்' என்ற அவப்பெயர் போரிஸ் ஜான்சனுக்கு கிடைத்தது. இதையடுத்து, அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியினரே கடந்த மாதம் கொண்டு வந்தனர். இந்த வாக்கெடுப்பில் மயிரிழையில் அவரது பிரதமர் பதவி தப்பியது.
இந்த சூழலில், பாலியல் புகாருக்கு உள்ளான எம்.பி. கிறிஸ் பிஞ்சரை கட்சியின் துணைத் தலைமை கொறடாவா நியமித்தார் போரிஸ். இதனால் அதிருப்தியடைந்த ஆளுங்கட்சி எம்.பி.க்கள், அமைச்சர்கள் பலரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, எம்.பி.க்களின் ஆதரவை இழந்ததால் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் அண்மையில் ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் உட்பட 4 எம்.பிக்கள் போட்டியிட்டனர். அவர்களில் சுனக் ரிஷிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்பட்டது. கொரோனா காலக்கட்டத்தில் நிதித்துறை அமைச்சராக இருந்த சுனக் ரிஷி, நாட்டின் பொருளாதாரம் சரிந்து விடாமல் பார்த்துக் கொண்டதற்காக அவருக்கு பிரிட்டன் மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. அவரும் தனது பிரச்சாரத்தை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவராக ரிஷி சுனக் இருந்த போது அவர் பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 7 வினாடிகளே கொண்ட அந்த வீடியோவில், "எனது நண்பர்கள் அனைவரும் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். கீழ் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் யாரும் எனது நண்பர்களாக இருந்ததில்லை" என ரிஷி சுனக் கூறுகிறார்.
இந்த வீடியோவை ட்விட்டரில் நேற்று வெளியாகி வைராலனது. ஒரு நாளிலேயே 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். மேலும், ரிஷி சுனக்குக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமான கமெண்ட்டுகளையும் பிரிட்டன் மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோ, பிரதமர் பதவிக்கு போட்டியிடும் ரிஷி சுனக்குக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.