கம்போடியா நாட்டில் சியாம் ரிப்பில் தன் குடும்பத்துக்கு சொந்தமான முதலைப் பண்ணையை பராமரித்து வந்துள்ளார் 72 வயது முதியவர் ஒருவர். அந்தப் பண்ணையில் இருந்த முதலை ஒன்று அண்மையில் முட்டைகளை இட்டுள்ளது. அதன்பின் அந்த முதியவர் தாய் முதலையை கூண்டில் இருந்து வெளியேற்றிவிட்டு, அதன் முட்டைகளைச் சேகரிக்க முயன்றுள்ளார்.
இதற்காக அவர் அங்கே இருந்த தடி ஒன்றை எடுத்து முதலையை விரட்ட முயன்றுள்ளார். அப்போது அந்த முதலை அவரின் தடியை வாயால் பிடித்து இழுத்துள்ளது. இதில் நிலைத் தடுமாறிய அந்த முதியவர் கீழே விழுந்துள்ளார். பின்பு அங்கு இருந்த முதலைகள் முதியவரை சுற்றி வளைத்ததாக கூறப்படுகிறது.
பின்பு அவை அந்த முதியவரை கொடூரமாக கடித்து குதறி தாக்கியுள்ளது. 40 முதலைகள் சுற்றி வளைத்ததால் செய்வதறியாத தடுமாறிய அந்த முதியவர், தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளார். ஆனால் அதற்குள்ளாக முதலைகள் சரமாரியாக கடித்து குதறியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து முட்டையை சேகரிக்க சென்ற முதியவரை வெகுநேரமாகியும் காணவில்லை என உறவினர்கள் பண்ணையில் தேடியுள்ளனர்.
அப்போது முதலை பண்ணைக்கு நடுவே முதியவரின் உடல் பாகங்கள் இருந்ததைக் கண்டவர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு போலீஸார் முதியவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கம்போடியா நாட்டில் முதலைகள் வளர்ப்பது சகஜமானதாக கூறப்படுகிறது. கம்போடிய நாட்டு மக்கள் முதலைகளை முட்டை, தோல் மற்றும் இறைச்சிக்காக வளர்த்து வருகின்றனர். ஆனால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் அடிக்கடி நடப்பதாகவும், இதனை முறைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் இப்போது எழுந்து வருகிறது.