ஐக்கிய அரபு அமீரகத்தில் இனிமேல் நடத்தப்படும் குடும்ப நிகழ்ச்சிகளில் பத்து பேருக்கு மேல் கலந்துகொள்ளக்கூடாது என அந்நாட்டின் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது.
இங்குள்ள சுகாதாரத் துறையும் பேரிடர் மேலாண்மைத் துறையும் இணைந்து கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு குடும்ப நிகழ்விலும் நெருங்கிய உறவினர்கள் பத்து பேர் மட்டுமே கலந்துகொள்ளவேண்டும் என்றும் அவர்கள் நிகழ்வில் பங்கேற்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்திருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பஃபே முறைப்படி உணவு பரிமாறினால், அதில் ஒருமுறை பயன்படுத்தும் பாதுகாப்பான தட்டுகள், கோப்பைகளைப் பயன்படுத்தவேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
குடும்பத்தின் சுக துக்க நிகழ்வு நடைபெறும் இடங்கள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும் என்றும் அரபு அமீரக அரசின் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.