கொரோனா ஊரடங்கிறகுப் பிறகு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சந்திப்பு, உலக நாடுகளை உற்றுநோக்க வைத்திருக்கிறது.
இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றிருக்கும் கிம் ஜாங் உன்னிற்க்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு, புதின் - கிம் ஜாங் உன் பரஸ்பர சந்திப்பு இன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் முக்கிய விண்வெளி மையமான வோஸ்டோச்னி காஸ்மோடிரோம் தளத்தில் உள்ள பல முக்கிய அம்சங்களை வடகொரிய அதிபருக்கு புதின் சுற்றிக் காண்பித்தார்.
பின்னர், ’வடகொரியாவுக்கு தனது சொந்த செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கு ரஷ்யா உதவ தயாராக இருக்கிறது’ என்று அதிபர் புதின் உறுதியளித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இரு நாட்டுத் தலைவர்களும் உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்களை வழங்குவது குறித்து கலந்துரையாடியிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்தபோது வடகொரியாவின் ராணுவம் இரண்டு ஏவுகணைகளை மேலே ஏவி சோதனை நடத்தியது. அந்த ஏவுகணைகள், கிழக்கு கடலை நோக்கி ஏவப்பட்டதாக தென்கொரிய ராணுவமும் ஜப்பானிய அரசாங்கமும் தெரிவித்துள்ளன.
முன்னதாக ரஷ்யா - உக்ரைன் போரை மறைமுகமாகக் குறிப்பிடும் விதமாக, ’ரஷ்யா தனது பாதுகாப்புக்காக மேற்கொண்டு வரும் புனிதப் போரில், அந்நாட்டிற்குத் தேவைப்படும் முழுமையான, நிபந்தனையற்ற ஆதரவை வடகொரியா வழங்கும்’ என கிம் ஜாங் உன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருநாடுகளுக்கு இடையேயான ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானால், ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் நீடிக்க வாய்ப்புள்ளது என்றும் அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கி அதற்குப் பதிலாக எரிசக்தி, அதிநவீன ஆயுத தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பெறவும், இதன்மூலம் அமெரிக்காவிற்கு எதிரான வல்லமை கொண்ட நாடாக காட்டிக்கொள்ளவும் வடகொரியா அதிபர் கிம் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆயுதப் பரிமாற்றம் நடக்கலாம் என்பதாலும், தற்போது உக்ரைன்- ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவதாலும், இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு உலக நாடுகளிடையே பேசுபொருளாகியுள்ளது.
வடகொரியா, தனது எதிரிகளான அமெரிக்கா, தென்கொரியாவுக்கு எதிராக அதிகளவிலான ஆயுதங்களை தயாரித்து இருப்பில் வைத்துள்ளதாக தெரிகிறது. தவிர, தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதுபோல் அடிக்கடி அந்நாடு ஏவுகணைகளை சோதனை செய்தும் வருகிறது. இதன்மூலம் வல்லரசு நாடுகளுக்கு இணையாக வளர்ந்துள்ளது வடகொரியா.
நீண்டகாலமாக இருப்பில் வைத்துள்ள ஆயுத தளவாடங்களை தற்போது, தனது நட்பு நாடான ரஷ்யாவுக்கு வழங்க வடகொரியா முன்வந்திருப்பதாகவும், இதன்மூலம் பொருளாதாரரீதியில் வடகொரியாவும், ஆயுதபலத்தில் ரஷ்யாவும் பலனடைய இருப்பதாகவும் உலக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.