நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஏவுகணை மற்றும் அணு ஆயுத உதவியை வழங்கி வருவதாகக் கடந்த மாதம் செய்திகள் வெளியாகின.
தென் கொரியாவும், அமெரிக்காவும் இதை உறுதிப்படுத்தியிருந்தன. அதன்படி, ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா ராணுவம் நேரடியாக களத்தில் இறங்கி உள்ளதாகவும், அந்நாட்டு ராணுவத்தின் அதிசிறப்பு படையை சேர்ந்த 10 ஆயிரம் ராணுவ வீரர்களை ரஷ்யாவுக்கு வழங்கி உள்ளதாகவும், அவர்கள் ஏகே12 ரக துப்பாக்கிகள், பீரங்கி குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களுடன் உக்ரைனை ஒட்டிய எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளதாகவும், ரஷ்ய போரில் அந்நாட்டுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், ரஷ்யாவின் கிழக்கே வெவ்வேறு 5 தலங்களில் அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் உக்ரைனின் பாதுகாப்பு உளவு பிரிவு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறக்கப்பட்டுள்ள வடகொரியா வீரர்கள் இணையதள வசதியைப் பயன்படுத்தி ஆபாச படம் பார்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது. வடகொரிய வீரர்களுக்கு தடையற்ற இணையதள வசதி கிடைத்துள்ளது. இது அவர்களுக்கு ஆச்சர்யமளிக்கும் விசயமாகப் பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அவர்கள், இணையதளம் வழியே ஆபாச படங்களை பார்த்து வருகின்றனர் என ஆங்கில ஊடகம் (பைனான்சியல் டைம்ஸ்) ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், உக்ரைனுக்கு கிம் ஜாங் அன் அனுப்பிவைத்த வடகொரிய வீரர்களிடையே இந்த இணையதள பயன்பாடு கிடைத்தது பற்றிய விவரங்கள் எப்படி வெளிவந்தன என்ற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து அந்த ஊடகத்தின் வெளியுறவு வர்ணனையாளர் கிடியோன் ராச்மேன், “ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்ட வடகொரிய வீரர்கள் இதற்குமுன் இணையதளத்தைப் பயன்படுத்தியதில்லை. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. தற்போது அவர்களிடம் இணையதள வசதி கிடைக்கப் பெற்றதையடுத்து, அவர்கள் ஆபாசப் படங்களைப் பார்க்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
வடகொரியா நாட்டின் ரகசியங்கள் அவ்வளவு எளிதில் வெளிவருவதில்லை. அதுமட்டுமின்றி கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் அங்கே கடுமையானது என்று சொல்லப்படுவதும் உண்டு. இணையதள வசதி, நாடகம், சினிமா போன்றவற்றுக்கு அங்கே தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, அதை மறைமுகமாகப் பார்க்கும் அந்நாட்டு மக்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது.