"அமெரிக்காவும் அதன் கைப்பாவை தென்கொரியாவும்...” எச்சரிக்கை விடுத்த வடகொரிய அதிபரின் சகோதரி

"அமெரிக்காவும் அதன் கைப்பாவை தென்கொரியாவும்...” எச்சரிக்கை விடுத்த வடகொரிய அதிபரின் சகோதரி
"அமெரிக்காவும் அதன் கைப்பாவை தென்கொரியாவும்...” எச்சரிக்கை விடுத்த வடகொரிய அதிபரின் சகோதரி
Published on

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜாங் அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏவுகணை சோதனைகள் மூலம் வல்லரசான அமெரிக்காவும் அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வரும் வடகொரியாவும் உலகின் மற்ற நாடுகளிலிருந்து மாறுபட்டது. இதில் வடகொரியாவை குறிப்பிட காரணம், அந்த நாட்டின் ரகசியங்கள் அவ்வளவு எளிதில் வெளிவருவதில்லை. அதுமட்டுமின்றி கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் அங்கே கடுமையானது என்ற செய்திகள்.

வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீடித்து வரும் எல்லைப் பிரச்சனையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அப்படி கடந்த ஆண்டில் மட்டும் 70க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது. சமீபத்தில்கூட 4 ஏவுகணை சோதனைகளை செய்து அது சோதித்துப் பார்த்தது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகள் எதிர்ப்பை மீறியும் வடகொரியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. என்றாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது அந்நாடு. இந்தநிலையில், வடகொரியாவில் தற்போது கடும் உணவுப் பஞ்சம் நிலவி வருவதாகவும், அதைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் தென்கொரிய நாடானது அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வடகொரியா, ”இந்த விவகாரத்தில் ஐ.நா. தலையிட்டு அமெரிக்க - தென்கொரிய கூட்டுப் போர் பயிற்சியை உடனே நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தி உள்ளது.

மேலும் இந்த பயிற்சிகள் குறித்து ஐ.நா. அமைதி காப்பது தங்களுக்கு வருத்தம் அளிப்பதாகவும் வடகொரியா, ஐ.நாவுக்கு எழுதும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜாங் அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து நிகழ்வு ஒன்றில் பேசியிருக்கும் கிம் யோ ஜாங், “அமெரிக்கப் படைகள் மற்றும் அதன் கைப்பாவை தென் கொரிய ராணுவத்தின் அமைதியற்ற ராணுவ நகர்வுகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இதற்காக எந்த நேரத்திலும் விரைவான பெரிய அளவிலான நடவடிக்கை எடுக்க தயராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு அடுத்து, அவருடைய சகோதரி கிம் யோ ஜாங், சக்தி வாய்ந்த நபராக அந்நாட்டில் அறியப்படுகிறார். அவர், அந்நாட்டின் அதிகாரமிக்க வடகொரியத் தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும் உள்ளார். கிம் ஜாங் உன், அதிபரான காலம் தொட்டே அவருடைய சகோதரி கிம் யோ ஜாங்குக்கும் ஆட்சி அதிகாரத்தில் முக்கியப் பொறுப்பு அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த ஆண்டு “நீங்கள் அடுத்த நான்கு வருடங்களுக்கு அமைதியாக உறங்க வேண்டும் என்று நினைத்தால் எங்களைச் சீண்டாமல் இருப்பது நல்லது” என்று ஜோ பைடன் அரசுக்கு கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com