லிபியாவுக்கு நேர்ந்த கதிதான் வடகொரியாவுக்கும் ஏற்படும் என அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்த கருத்துக்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்து அதிபர் ட்ரம்புடனான சந்திப்பையும் ரத்துச் செய்யப் போவதாக மீண்டும் எச்சரித்துள்ளது.தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதாலும், அணு ஆயுத திட்டங்களை முழுமையாக கைவிட வேண்டும் என வற்புறுத்தியதாலும், ட்ரம்புடனான சந்திப்பை ரத்துச் செய்யப் போவதாக கிம் ஜாங் உன் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் வடகொரியாவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் சோ சோன் ஹூய் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் முட்டாள்தனமாகவும், அறியாமையிலும் வடகொரியாவைப் பற்றி பேசியதாக குற்றம்சாட்டினார். பேச்சுவார்த்தைக்கு வரும்படி, அமெரிக்காவிடம் ஒருபோதும் கெஞ்சவில்லை என தெரிவித்த அவர், அறையில் அமர்ந்து அமெரிக்க அதிபர் எங்களை சந்திக்கப் போகிறாரா? அல்லது பரஸ்பர அணு ஆயுதப் போரில் சந்திக்கப் போகிறதா என்பதை அந்த நாடுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார். இதனால் அதிபர் ட்ரம்ப் - கிம் ஜாங் உன் இடையிலான சந்திப்பு திட்டமிட்டபடி நடக்குமா என்பதில் மீண்டும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.