தடையை மீறி தென்கொரியப் படங்கள் மற்றும் கே டிராமா சீரிஸ்களைப் பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, வடகொரியாவில் 2 சிறுவர்கள் பொது இடத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக வெளியான செய்தி, உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுடன் இணைந்து, தென்கொரியா நடத்தி வரும் கூட்டு ராணுவப் பயிற்சி மற்றும் ஒத்திகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. குறிப்பாக தென்கொரிய எல்லைக்கு அருகிலும், அதன் கிழக்கும் மற்றும் மேற்கு கடற்பரப்பிலும், கடந்த 2 நாட்களில் வடகொரியா 130 முறை பீரங்கி குண்டுகளை வீசி சோதனை செய்ததாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. ஏவுகணை தாக்குதல் சோதனைகளை அதிபர் கிம் ஜாங் உன் நேரிடையாக பார்வையிட்ட படங்களையும் வட கொரியா வெளியிட்டது.
இரண்டு நாடுகளும் எதிரும், புதிருமாக இருந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான, ரசிகர்களிடையே பேராதரவுப் பெற்ற தென் கொரியாவின் கே டிராமா சீரிஸ்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்கள் ஆகியவற்றை பார்த்த குற்றச்சாட்டின் கீழ், இரண்டு சிறுவர்கள் பொதுமக்கள் மத்தியில், நடுவீதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கொரியாவின் ரியாங்காங் மாகாணத்தைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளி மாணவர்களான 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு மாணவர்கள், தென் கொரியா மற்றும் அமெரிக்கா நாடகங்களை பார்த்தது மட்டுமின்றி அதனை தனது நண்பர்களுக்கு பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
மாணவர்கள் டிஜிட்டல் தளத்தில் பார்த்ததை காவல்துறையினர் உறுதிசெய்த நிலையில், இரு சிறுவர்களும் பொதுஇடத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அங்கு உள்ளூர் மக்களுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் மாதம் காவல்துறை அதிகாரிகள், அவர்களை சுட்டுக் கொலை செய்து மரணத் தண்டயை நிறைவேற்றியுள்ளனர் என கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்நாளில் அதே வயதுடைய மற்றொரு சிறுவன் தனது மாற்றந் தாயை (stepmother) கொலை செய்த குற்றத்தின் கீழ், சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிகிறது.
வட கொரியாவில் வெளிநாட்டு மீடியாக்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், தென் கொரியாவுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில், சிறுவர்களின் மரணத் தண்டனை விபரங்களை தற்போது வட கொரியாவே கசிய விட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளநிலையில், உலக நாடுகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.