அமெரிக்க அதிபரின் வடகொரியாவிற்கு எதிரான செயல்பாடுகளுக்கு பதிலடியாக பசிபிக் பெருங்கடல் பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்த உள்ளது.
வடகொரியா பசிபிக் பெருங்கடல் பகுதியில் அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணை சோதனை நடத்த உள்ளது. இந்த ஏவுகணை சோதனை வெற்றியடையும் பட்சத்தில், வடகொரியா அமெரிக்காவுடன் போர் செய்ய தயாராகிவிடும் எனக் கருதப்படுகிறது. வடகொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரி யங் ஹோ, அதிபர் கிம் ஜாங் உன் -இடம், ஹைட்ரஜன் வெடிகுண்டை பசிபிக் பெருங்கடல் பகுதியில் சோதனை செய்ய பரிந்துறை செய்தார். வடகொரியாவை அழித்து விடுவோம் என்ற அமெரிக்க அதிபரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த சோதனை இருக்க வேண்டும் என்று அதிபரிடம் ரி யங் ஹோ கூறியுள்ளார்.
இதுகுறித்து, வடகொரியா சியோலில் உள்ள பாதுகாப்பு அமைப்பின் ஆராய்ச்சியாளர் யாங் கூறும்போது, வடகொரியா வைத்திருக்கும் வாசோங்-12 அல்லது வாசோங்-14 ஆகிய அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகளை, பசிபிக் பெருங்கடலில் சில நூறு கிலோமீட்டர்கள் தூரத்துக்கு அதிகமாக சோதனை செய்ய வாய்ப்புள்ளது. இந்த சோதனை அமெரிக்காவிற்கு எச்சரிக்கை செய்யும் விதத்தில் அமையும் என்று கூறினார்.
இந்த ஏவுகணை சோதனை வடகொரியாவின் முழு ஆயுத, ராணுவ பலத்தையும் வெளிக்காட்டும் விதமாக அமையும். இதனால் போர் மூளும் அபாயம் உள்ளதாகக் கருதப்படுகிறது.