அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, வடகொரியா நடத்திவரும் ஏவுகணைச் சோதனைகள், சர்வதேச நாடுகளை அதிருப்தியடைய வைத்துள்ளது. வடகொரியாவிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தென்கொரியா, அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. இது வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னிற்குப் பிடிக்கவில்லை. மேலும், வரும் ஆகஸ்ட் 21 மற்றும் 24 தேதிகளில் அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகள் இணைந்து ராணுவ போர்ப் பயிற்சி மேற்கொள்ள இருப்பதும் வடகொரிய அதிபருக்குப் பிடிக்கவில்லை.
இதையும் படிங்க: சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்: டெல்லி முக்கியப் பகுதிகளில் 144 தடை!
இதனால் தென்கொரியாவை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், வடகொரியா ஆயுதங்கள் சப்ளை செய்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், ராணுவ அதிகாரிகளுடன் அதிபர் கிம் ஜாங் உன் ஆலோசனை மேற்கொண்டார். அந்தக் கூட்டத்தில், மூத்த ராணுவ ஜெனரலை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அவருக்குப் பதிலாக ரி யோங் கில் என்பவரை ராணுவ தலைமை ஜெனரலாக நியமித்துள்ளார். இவர் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்து வருகிறார். அதோடு, ஆயுத உற்பத்தியை அதிகரித்து, போர்ப் பயிற்சிகளில் ஈடுபடும்படி உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. வரைபடத்தில், தென்கொரியாவை கிம் ஜான் உன் சுட்டிக்காட்டுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
அடுத்த மாதம் வடகொரியா, 75ஆம் ஆண்டு குடியரசைக் கொண்டாட இருக்கிறது. இதற்கான ராணுவ அணிவகுப்பையும் அந்நாடு நடத்த இருக்கிறது. ஏவுகணை சோதனைகள் மூலம் வல்லரசான அமெரிக்காவும் அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வரும் வடகொரியா, உலகின் மற்ற நாடுகளிலிருந்து மாறுபட்டது. இதில் வடகொரியா நாட்டின் ரகசியங்கள் அவ்வளவு எளிதில் வெளிவருவதில்லை. அதுமட்டுமின்றி கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் அங்கே கடுமையானது என்று சொல்லப்படுவதும் உண்டு.
இந்தச் சூழலில், வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீடித்து வரும் எல்லைப் பிரச்னையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அப்படி கடந்த ஆண்டில் மட்டும் 70க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது. உலக நாடுகள் எதிர்ப்பை மீறியும் வடகொரியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்கு பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. என்றாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த நாட்டு அதிபர், போருக்கு ஆயத்தமாகும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பது எல்லா நாடுகளையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம், ”உண்மையான போரை எதிர்கொள்ளும் அளவுக்கு ராணுவ வீரர்கள் தீவிர பயிற்சியுடன் இருக்க வேண்டும்” என கிம் ஜான் உன் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவும் சூழல் இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.