'ஒரு பிரதமர் கூட 5 ஆண்டு ஆட்சியை முடிக்கவில்லை'.. பாகிஸ்தானின் அரசியல் பிளாஷ்பேக்!

'ஒரு பிரதமர் கூட 5 ஆண்டு ஆட்சியை முடிக்கவில்லை'.. பாகிஸ்தானின் அரசியல் பிளாஷ்பேக்!
'ஒரு பிரதமர் கூட 5 ஆண்டு ஆட்சியை முடிக்கவில்லை'.. பாகிஸ்தானின் அரசியல் பிளாஷ்பேக்!
Published on

பாகிஸ்தானின் வரலாற்றில், எந்தப் பிரதமருமே இதுவரை 5 ஆண்டு கால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்ததில்லை. தற்போது இம்ரான் கானின் ஆட்சியும் பதவி காலத்திற்கு முன்பே முடிவுக்கு வந்துள்ளது.

1947 ஆம் ஆண்டில் பாகிஸ்தானும், இந்தியாவும் ஆங்கிலேயே ஆட்சியில் இருந்து சுதந்திர நாடுகளாக மாறியது. இரண்டும் ஒரே காலகட்டத்தில் தோன்றிய நாடுகள் என்றாலும், அவை இரண்டுமே வேறுபட்ட அரசியல் பாதையையே கொண்டுள்ளது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு ரீதியாக அரசியல் ஸ்திரமற்ற தன்மை நிலவி வருகிறது, இதனால் அந்த நாட்டில் எந்தப் பிரதமரும் தனது முழு பதவி காலத்தை நிறைவு செய்ததில்லை



பாகிஸ்தானின் முதல் பிரதம மந்திரி லியாகத் அலி கான் படுகொலை செய்யப்பட்டநிலையில், அதனையடுத்து இப்போதுவரை அனைத்து ஆட்சிகளும் கலைக்கப்பட்டும், பதவி நீக்கம் செய்யப்பட்டும் அல்லது இராணுவ ஆட்சி மூலமாகவும் என எல்லா பிரதமர்களும் ஆட்சியை நிறைவு செய்யாமலேயே  பதவியை இழந்துள்ளனர்.

ஜின்னா மறைவு - லியாகத் அலிகான் படுகொலை:

பாகிஸ்தான் சுதந்திர நாடாக மாறிய பிறகு, அதன் நிறுவன தந்தை முகமது அலி ஜின்னா நாட்டின் கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்றார். 1948 இல் ஜின்னா இறந்தபோது, கவாஜா நஜிமுதீன் கவர்னர் ஜெனரலானார், ஆனால் உண்மையான அதிகாரங்கள் பிரதமர் லியாகத் அலி கானிடம் இருந்தன. 1951 இல் ராவல்பிண்டியின் கம்பெனி பாக்கில் லியாகத் அலிகான் படுகொலை செய்யப்பட்ட பிறகு, கவாஜா நஜிமுதீன் பிரதமராகப் பொறுப்பேற்றார், அவரின் ஆட்சி 1953 வரை நீடித்தது. பின்னர் முகமது அலி போக்ரா 1953 இல் இருந்து 1955 வரை பதவியில் இருந்தார். பிறகு சவுத்ரி முகமது அலி, ஹுசைன் சஹீத் சுரதி, இப்ராகிம் இஸ்மாயில் சத்ரிகர், பெரோஷ் கான் நூன் ஆகியோர் 1958 வரை சில காலங்கள் பதவியில் இருந்தனர்.



பாகிஸ்தான் 1956 இல் ஒரு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது, இதனை தொடர்ந்து நாட்டில் பல்வேறு சலசலப்புகள் தொடங்கின. மேற்கு, கிழக்கு பாகிஸ்தான் சர்ச்சைகளும் தீவிரமடைய தொடங்கின

ராணுவ ஆட்சி - வங்கதேச பிரிவு:

1958 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டு பிரதமராக இருந்த மிர்சா நாடு கடத்தப்பட்டார். அதன் பிறகு முதன்முறையாக பாகிஸ்தான் ராணுவ ஆட்சியின் கீழ் வந்தது, ஜெனரல் அயூப் கானின் கீழ் இந்த இராணுவ ஆட்சி 1971 வரை நீடித்தது. இந்த காலகட்டத்தில் ஜெனரல் அயூப் கான் தலைமை இராணுவ சட்ட நிர்வாகி மற்றும் பாகிஸ்தானின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். இவரின் காலத்தில் தான் 1965இல் பாகிஸ்தான் - இந்தியா போர் நடந்தது.

Image courtesy : businesstoday

1971இல் வங்கதேசப் போர் மற்றும் நெருக்கடிகளுக்கு பின்னர் அப்போதைய ராணுவ ஜெனரல் யாஹ்யா கான், பாகிஸ்தானில் தேர்தல் நடத்த உத்தரவிட்டார். இந்தத் தேர்தல்களில் கிழக்கு பாகிஸ்தானில்(வங்கதேசம்) ஷேக் முஜிப்-உர்-ரஹ்மான் தலைமையிலான அவாமி லீக் மற்றும் மேற்கு பாகிஸ்தானில் சுல்பிகர் அலி-பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை வெற்றி பெற்றன. இதனால் 1971 போருக்குப் பிறகு, சுல்பிகார் அலி பூட்டோ டிசம்பர் 20 அன்று பாகிஸ்தானின் அதிபராகப் பதவியேற்றார்.

ஜனநாயக சிற்பி சுல்பிகர் அலி பூட்டோவுக்கு தூக்கு  - மீண்டும் ராணுவ ஆட்சி:

இதற்குப் பிறகு, பூட்டோ 1973 இல் 146 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு நாடாளுமன்ற அவையில் 108 வாக்குகளைப் பெற்று பாகிஸ்தானின் பிரதமரானார். அவர் 1973 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் அரசியலமைப்பின் சிற்பியாக இவர் கருதப்படுகிறார், பாகிஸ்தானை நாடாளுமன்ற ஜனநாயக பாதையில் பயணிக்க வைத்தார் சுல்பிகார் அலி பூட்டோ.



ஜூலை 5, 1977 இல், ஜெனரல் ஜியா-உல்-ஹக் தலைமையிலான இராணுவம், இராணுவப் புரட்சி மூலம் பாகிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது. அதன்பின்னர் பூட்டோவுக்கு ராணுவத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு 1979 இல் தூக்கிலிடப்பட்டார். பாகிஸ்தானின் ஜனாதிபதியாக இருந்த ஜெனரல் ஜியா-உல்-ஹக்கின் ராணுவ ஆட்சி 1988 வரை நீடித்தது, அவர் ஒரு விமான விபத்தில் கொல்லப்பட்டார்.

பெனாசிர் பூட்டோ - நவாஸ் ஷெரிப்  - முஷரஃப் அரசியல்:

அப்போதுதான் பெனாசிர் பூட்டோ 1988-ல் பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்றார், பிறகு 1990 ஆம் ஆண்டு  நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அவரது  பதவிக்காலம் 1993 வரை நீடித்தது, பிறகும் பாகிஸ்தானில் அரசியல் ஸ்திரமற்ற தன்மை நிலவியது, இதனால் இந்த கால கட்டத்தில் இரண்டு இடைக்கால பிரதமர்கள் பதவியில் இருந்தனர். பின்னர் பெனாசிர் பூட்டோ 1993 முதல் 1997 வரை பதவியில் இருந்தார். பிறகு நவாஸ் ஷெரீப் 1997 இல் இரண்டாவது முறையாக பிரதமராக மீண்டும் வந்தார். அப்போதுதான் 1999 இல் ராணுவ ஜெனரல் பர்வேஸ் முஷாரப் ஆட்சியை கைப்பற்றினார், அவர் 2008 வரை பாகிஸ்தானை ராணுவ ஆட்சி செய்தார்.



முஷாரப் ஆட்சியின்போதுதான் ஒரு பொதுக்கூட்ட மேடையில் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார். அதன்பின்னர் 2008 ஆம் ஆண்டு முதல் 2012 வரை சையத் யூசுப் ரசா கிலானி தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி அரசாங்கத்திற்கு தலைமை தாங்கி பிரதமராக இருந்தார். பிறகு ராஜா பர்வேஸ் அஷ்ரப் 2012ல் இருந்து 2013வரை சிறிது காலம் பிரதமராக இருந்தார்.

2013 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற நவாஸ் ஷெரீப், ஊழல் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து 2017 ஆம் ஆண்டு பதவி விலகினார். இதனை அடுத்து, 2018 ஆம் ஆண்டு பெரும் ஆரவாரங்களுக்கு மத்தியில் இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றார், அவரின் ஆட்சியும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

courtesy : businesstoday

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com