வங்கதேசத்துக்கு புலம் பெயர்ந்து வரும் ரோஹிங்ய மக்களுக்கு போதிய உணவு, உறைவிடம் மற்றும் குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால் உயிரிழப்புகள் ஏற்படலாம் என நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள முகமை அச்சம் தெரிவித்துள்ளது.
மியான்மர் ராணுவத்தின் அடாவடிகளுக்கு அஞ்சி மியான்மரில் இருந்து இதுவரை 4 லட்சத்து 10 ஆயிரம் ரோஹிங்ய இஸ்லாமியர்கள் வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக எண்ணற்ற மனிதநேய அமைப்புகள் அங்கு தீவிரமாக பணியாற்றி வருகின்றன.
இந்நிலையில், அடைக்கலமாக புகுந்து வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவர்களுக்கு தேவையான உணவு, உறைவிடம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படை வசதிகளை செய்து தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான அபாயங்கள் எழுந்திருப்பதாக குழந்தைகளை காப்போம் நிவாரண முகாமையின் செய்தி தொடர்பாளர் மார்க் பியர்ஸ் அச்சம் தெரிவித்துள்ளார். எனவே ரோஹிங்ய மக்களுக்கு போதிய உதவிகள் வழங்க சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.