வங்கிக் கடன் மோசடி வழக்கில் லண்டனில் சிறையிலுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் ஜாமீன் மனு மூன்றாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
13,500 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாக நிரவ் மோடி மீது குற்றச்சாட்டு உள்ளது. அவர் இங்கிலாந்தில் சுதந்திரமாக சுற்றித் திரிவது தெரியவந்தது. அவரை நாடு கடத்தும்படி இந்தியா விடுத்த கோரிக்கையை ஏற்று இங்கிலாந்து நீதிமன்றம் நிரவ் மோடிக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்தது. பின்னர், மார்ச் 20ம் தேதி நிரவ் மோடி கைது செய்யப்பட்டார். நிரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது லண்டன் நீதிமன்றம்.
பின்னர், மார்ச் 29ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது, நிரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை நிரவ் கலைத்துவிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், நிரவ் மோடியை ஏப்ரல் 26ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், வீடியோ கான்பிரசிங் மூலம் இன்று நிர்வ் மோடி ஆஜரானார். அப்போது, மூன்றாவது முறையாக அவரது ஜாமீன் மனுவை லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன், மே 24ம் தேதி வரை சிறையில் இருக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். மே 30ம் தேதி முழு விசாரணை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.