அமெரிக்காவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்நாட்டில் ஜனநாயக மற்றும் குடியரசு ஆகிய கட்சிகள் பிரதான கட்சிகளாக உள்ளன. இதில், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். இவருடைய பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடியவுள்ளதால், வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அந்த வகையில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலே, ஆகியோர் களத்தில் உள்ளனர். இவர்களில் ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார். ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் ஜோ பைடன், ட்ரம்பை எதிர்த்து மீண்டும் நிற்கிறார். இந்த நிலையில், வாஷிங்டனில் நேற்று நடைபெற்ற தேர்தலில் நிக்கி ஹாலே வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் அதிக வாக்குச் சதவிகிதம் படைத்த நபரே, அந்நாட்டு அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார். அந்த வகையில் தற்போது டொனால்டு ட்ரம்ப், நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையில் நேரடி போட்டி நிலவி வருகிறது. ஏற்கெனவே அதிபராக இருந்த டொனால்டு ட்ரம்பிற்கு ஆதரவு அதிகமாக இருந்து வருகிறது. எனினும் போட்டியில் இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலேவும் தனது பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில்தான், வாஷிங்டனில் நேற்று நடைபெற்ற தேர்தலில் நிக்கி ஹாலே வெற்றி பெற்றுள்ளார். டொனால்டு ட்ரம்பிற்கு எதிராக நிக்கி ஹாலே பெறும் முதல் வெற்றி இதுவாகும். மேலும், அமெரிக்க வரலாற்றில் குடியரசுக் கட்சி பிரைமரியில் வெற்றிபெற்ற முதல் பெண் இவர்தான். எனினும், அவர் தனது சொந்த மாநிலமான தெற்கு கரோலினாவில் தோல்வியுற்றிருந்தார். அதேநேரத்தில், தொடர்ந்து வெற்றிபெற்று வந்த டொனால்டு ட்ரம்பிற்கு இது முதல் தோல்வியாக அமைந்துள்ளது. வாஷிங்டன் ஜனநாயக கட்சியின் கோட்டையாக விளங்குகிறது. இங்கு நிக்கி ஹாலே 63 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலின்போது வாஷிங்டனில் டிரம்பிற்கு எதிராக ஜோ பைடன் 92 சதவீத வாக்குகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கொலம்பியா, மெச்சிகன், நெவாடா, தெற்கு கரோலினா, லோவா போன்ற இடங்களில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 244 பிரதிநிதிகள் ஆதரவும், நிக்கி ஹாலேவுக்கு 43 பிரதிநிதிகள் ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலேவுக்கு தற்போது 52 வயதாகிறது. ’சதுப்பு நிலத்தின் ராணி’ என அழைக்கப்படும் இவரின் குடும்பம், இந்தியாவின் பஞ்சாப்பைப் பூர்வீகமாகக் கொண்டது. அந்தக் குடும்பம் முதலில் கனடாவில் குடியேறி, பின்னர் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தது. அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் வசித்த நிக்கி, அம்மாகாண ஆளுநராக 39 வயதில் பதவியேற்றார். அத்துடன், ’அமெரிக்காவின் இளம் ஆளுநர்’ என்ற சாதனையையும் படைத்தார். இந்த மாகாணத்தில் இரண்டு முறை ஆளுநராக இருந்தவர் நிக்கி. மேலும், டிரம்ப் அதிபராக இருந்த காலகட்டத்தில் ஐநா சபைக்கான அமெரிக்க பிரதிநிதியாகவும் நிக்கி ஹாலே பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் டிரம்பின் தீவிர ஆதரவாளராகவும், அவருடைய வெற்றிக்காகவும் உழைத்த நிக்கி, தற்போது அவருக்கு எதிராகவே களம் இறங்கி, வாஷிங்டன் மாகாணத்தில் முதல் வெற்றியைப் பதிவுசெய்திருப்பது அமெரிக்க அரசியலில் புயலைக் கிளப்பி உள்ளது.