நட்சத்திர கால்பந்தாட்ட வீரர்களில் மெஸ்ஸி, ரொனால்டோவுக்கு பிறகு அதிகம் பரிட்சயமான பெயர் நெய்மர். பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். கோல் அடித்த பின்னர் மைதானத்தில் இவர் செய்யும் வித்தைகளுக்கு பெயர் போனவர். ஒருமுறை மைதானத்தில் இவர் அடித்த பல்டி கூட பயங்கரமாக வைரல் ஆனது.
நட்சத்திர கால்பந்து வீரரான நெய்மர் காயம் காரணமாக தற்போது நடந்து வரும் Saudi Pro League தொடரில் இருந்து விலகியுள்ளார். அவர் அத்தொடரில் Al-Hilal அணிக்காக விளையாடி வந்தார்.
இந்நிலையில், ஹங்கேரியன் மாடல் கேப்ரியல்லா காஸ்பர், தனது 10 வயது குழந்தையின் தந்தை நெய்மர் என தெரிவித்துள்ளார். பிரேசிலின் சாவ் பாலோவில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் கேப்ரியல்லா சிவில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தான் நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், நெய்மர் மற்றும் அவரது குடும்பத்தை தொடர்புகொள்ள முயற்சி செய்து தோல்வி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு பொலிவியாவில் தேசிய அணியுடனான பயிற்சியில் அவர் ஈடுபட்டிருந்த போது தானும் அவரும் சந்தித்ததாக கேப்ரியல்லா தெரிவித்துள்ளார். மேலும், குழந்தையின் தந்தை யார் என்பதை நிரூபிக்க டிஎன்ஏ சோதனை செய்யவும் கேட்டுள்ளார். குழந்தையை வளர்ப்பதற்கு உதவும் வகையில் மாதம் 32,500 அமெரிக்க டாலர் பணமும், குழந்தையை 10 வருடம் தனித்து வளர்த்ததை ஈடு செய்யும் வகையில் 20 மில்லியன் அமெரிக்க டாலரும் கூடுதலாக கேட்டுள்ளார்.
தனது குழந்தையின் பெயர் ஜாஸ்மீன் ஜோ என்றும் அவர் டிவியில் நெய்மரை தொடர்ச்சியாக பார்த்து வருகிறார் என்றும் அவரை நேரில் பார்க்கவும் கட்டிப்பிடிக்கவும் ஜாஸ்மீன் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
நெய்மரின் தாய் மற்றும் சகோதரியின் முக அம்சங்கள் தனது மகளுக்கு இருப்பதாகவும் கேப்ரியல்லா தெரிவித்துள்ளார். தற்போது வரை நெய்மர் இதுகுறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.