இஸ்ரேலின் தாக்குதலால் தற்போது வரை இறந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை என்பது 40,000-த்தை நெருங்கும் நிலையில், 1 வருட காலமாகியும் தற்போதுவரை போர் நிறுத்ததற்கான அறிகுறியே இல்லை. போரை கைவிடக்கோரி பல்வேறு நாடுகள் வலியுறுத்தியும் தற்போது வரை நின்றபாடில்லை.
சரியாக சொல்ல வேண்டுமென்றால் கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் - காசாவிற்கு இடையே ஒலிக்க தொடங்கிய போரின் சத்தம் இன்று வரை ஓயவில்லை. இதனால் பரிதாபமாக தங்களின் இன்னுரை துறந்துவரும் அப்பாவி பொதுமக்களின் துயரமும் இன்றுவரை மாறவில்லை. இந்த நிலையில்தான், ஒன்றும் அறியாத பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைகள் இருவர் இந்த குண்டுகளுக்கு பலியான சோகம் தற்போது காசாவில் அரங்கேறியுள்ளது.
காசாவில் வாழ்ந்து வருபவர் முகமது அபுவெல். இவரது மனைவி கருவுற்றிருந்த நிலையில், பாதுகாப்பு கருதி மனைவியோடு இஸ்ரேல் ராணுவத்தின் அறிவுறுத்தலின் பேரில் தனது குடும்பத்தோடு டெய்ர்-அல்-பலாவில் உள்ள தற்காலிக வீட்டில் தஞ்சமடைந்துள்ளார். இவரது மனைவி ஜூமனா அராஃபா, ஒரு மருந்தாளராக இருந்துள்ளார். இந்நிலையில்தான் கடந்த வாரம் இத்தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.
தங்களுக்கு குழந்தை பிறந்துள்ளது என்ற செய்தியை சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்த முகமது அபுவெல்லின் மனைவி ஜூமனா அராஃபாவிற்கு, அடுத்து ஒரு கோர சம்பவம் அரங்கேரப்போகிறது என்று அப்போது தெரிந்திருக்கவில்லை....
சம்பவத்தின்படி, பிறந்து நான்கு நாளே ஆன, அய்சல் மற்றும் அசர் என்ற தனது குழந்தைகளுக்கு பிறப்புச்சான்றிதழ் பதிவு செய்வதற்காக அரசு அலுவலகத்திற்கு சென்றுள்ளார் முகமது அபுவெல். அப்போது, அலுலகத்தில் வந்த சிலர் முகமது அபுவெல் தங்கியிருந்த டெய்ர்-அல்-பலா என்ற இடத்திற்கு அருகில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது என்ற தகவலை தெரிவித்துள்ளனர்.
இதனால், பதறிப்போன முகமது அபுவெல், உடனடியாக தனது வீட்டிற்கு சென்று பார்த்தப்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தனது மனைவி, இரட்டைக் குழந்தைகள், மாமியார் என அனைவரும் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர் பாதிக்கப்பட்டோரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் குறித்து உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்த அபுவெல், “குழந்தைகள் பிறந்ததைக் கொண்டாடக்கூட எனக்கு நேரம் கிடைக்கவில்லை” என்று கூறி கண்ணீர் வடித்துள்ளார்.
தனது இரண்டு குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை கைகளில் வைத்து முகமது அபுவெல் கதறி அழும் காட்சிகள் காண்போரின் நெஞ்சங்களை நொறுங்கச் செய்துள்ளது. என்று தணியும் இந்த சோகம்?