கடந்த அக்டோபர் 7, 2023 முதல் காசா மீது இஸ்ரேலும், இஸ்ரேல் மீது காசாவும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அன்று தொடங்கி இன்றுவரை நடக்கும் அந்த இருதரப்பு தாக்குதலில் இதுவரை 39,006 காசா மக்கள் உயிரிழந்துள்ளனர். போலவே 1,139 இஸ்ரேலியர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இருபக்கமும் தற்போது வரை தொடர்ச்சியாக நடக்கும் இந்த தாக்குதல்களில் உள்ள மிகப்பெரிய சோகம் என்னவென்றால் இதில் அதிகம் பலியானது அப்பாவி மக்களும், பச்சிளம் குழந்தைகளும்தான்.
இதுகுறித்து தெரிவித்த UNICEF கூட “காசா, குழந்தைகளின் கல்லறையாக மட்டுமன்றி சர்வதேச சட்டத்திற்கான கல்லறையாகவும் மாறியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த சர்வதேச ஒழுங்கின் அவமானகரமான கறையாக இந்தப் போர் மாறியுள்ளது. அங்கு நடப்பது போர்க் குற்றம்” என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பல உயிர்களை கொன்று குவித்த இந்த போர்க்களத்தில் தற்போது புது உயிர் ஒன்று உருவாகியுள்ளது. அது பலரையும் நெகிழ்ச்சிக்கும் சோகத்துக்கும் ஒருசேர தள்ளியுள்ளது.
அதன்படி, பாலஸ்தீனம் அருகே நூசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேலின் தாக்குதலால் உயிரிழந்த ஓலா அட்னன் ஹர்ப் என்ற கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த ஆண் குழந்தையை காசா மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் காப்பாற்றியுள்ளனர். அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை வெளியே எடுத்த மருத்துவர்கள் குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளித்துள்ளனர்.
குழந்தை தற்போது நலமுடன் இருக்கிறார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை ஆரோக்கியமாக இருப்பது மகிழ்வை தந்தாலும், அதன் தாய் கொல்லப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, காசா மீது இஸ்ரேல் கடைசியாக நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.