பதவியை ராஜினாமா செய்யப் போவதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்றி (ஜன.,19) நடந்த தொழிலாளர் கட்சியின் கூட்டத்தின் போது “இனிமேல் இந்த பதவியில் தொடர என்னிடம் போதுமான ஆற்றல் இல்லை. அடுத்த மாதம் நான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளேன். இதை முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பாக கருதுகிறேன்.
இது கடினமான வேலை என்று தெரியும். இருப்பினும் நாமெல்லாம் மனிதர்கள்தான். என்னால் முடிந்தவரை பணியாற்றியிருக்கிறேன். ஆகையால் இது ராஜினாமா செய்ய வேண்டிய நேரமாக நினைக்கிறேன். தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால் பதவி விலகவில்லை. நிச்சயம் தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற முடியும் என நம்புகிறேன். அதேநேரம், நான் அதில் போட்டியிடப்போவதில்லை” என ஜெசிந்தா ஆர்டென் அதிரடியாக பேசியிருந்தார்.
தனது 37வது வயதில் பிரதமராக தேர்வான ஜெசிந்தா ஆர்டென் உலகின் இளமையான பெண் பிரதமர் என்ற பெயரை பெற்றிருந்தார். கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது நியூசிலாந்தில் சிறப்பாக செயல்பட்டு அதனை கட்டுக்குள் கொண்டு வந்த ஜெசிந்தா, பணவீக்கம், நிதி நெருக்கடிகள் போன்ற பொருளாதார பிரச்னைகளையும் சிறப்பாக கையாண்டார்.
இப்படி இருக்கையில், நடப்பாண்டு அக்டோபர் மாதம் நியூசிலாந்தின் அடுத்த பிரதமருக்கான தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டிருக்கிறது. அதில், ஜெசிந்தா ஆர்டெனின் லேபர் கட்சி தோல்வியை தழுவும் என்றும், கிறிஸ்டோஃபர் லக்சனின் வலதுசாரி தேசிய கட்சி ஆட்சியை பிடிக்கும் என்றும் முடிவுகள் வெளியானது.
இந்த நிலையில்தான் பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதாக ஜெசிந்தா ஆர்டென் அறிவித்திருக்கிறார். இதனையடுத்து பிப்ரவரி 7ம் தேதி ஜெசிந்தா ராஜினிமா செய்யவுள்ளதால் எதிர்வரும் ஜனவரி 22ம் தேதி தொழிலாளர் கட்சிக்கான புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என்றும், அதன் பிறகு இடைக்கால பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
ஜெசிந்தாவின் ராஜினாமா அறிவிப்பு காட்டுத்தீயாக பரவியதை அடுத்து அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். அதில், “குறிப்பிடத்தகுந்த தலைவராக ஜெசிந்தாவை வரலாறு தீர்மானிக்கும். அவர் கனிவான மற்றும் நம்பமுடியாத அளவுக்கு புத்திசாலித்தனத்தை கொண்டவர். அரசியலில் பெண்களை ஆதரிப்பதற்கு சிறந்த வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.” என்று ஒரு பெண் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேபோல, “சகித்துக்கொள்ள முடியாத அளவிற்கு பல தரப்பினரால் பெண் வெறுப்பு மற்றும் துன்புறுத்தலுக்கு ஜெசிந்தா ஆர்டென் ஆளானார் என்பதை மறந்துவிட வேண்டாம்” என்றும் பதிவிட்டிருக்கிறார்கள். 2017ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட ஐந்தரை ஆண்டுகள் பிரதமராக பதவியில் இருந்த ஜெசிந்தாவுக்கு நியூசிலாந்து மக்களிடம் இருந்து மட்டுமல்லாமல் மற்ற நாட்டைச் சேர்ந்தவர்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.