அமெரிக்காவின் நியூயார்க் புரூக்ளின் பகுதியைச் சேர்ந்தவர் ரியான் கார்சன் (32). இவர் ஒரு கவிஞர். தவிர சமூக ஆர்வலரும்கூட. இவரை இளைஞர் ஒருவர் சரமாரியாகக் கத்தியால் குத்தி கொலை செய்யும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அதில், ரியான் கடந்த 2ஆம் தேதி, அதிகாலை 4 மணியளவில், தன் காதலியுடன் கிரவுன் ஹைட்ஸ் பேருந்து நிறுத்த இருக்கையில் அமர்ந்திருக்கிறார். அப்படியே இருவரும் பேசிக்கொண்டுள்ளனர். பின்னர், இருவரும் எழுந்து கொஞ்ச தூரம் முன்னால் நடக்கின்றனர். அப்போது அவர்களை முந்தியபடி இளைஞர் ஒருவர் செல்கிறார். அங்கு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலர்களை காலால் உதைக்கிறார். பின்னர் திரும்பிவந்து, ரியானைத் தாக்குகிறார். அவர் அதிலிருந்து தப்பிக்க முயல்கிறார். அப்போது முகமூடி அணிந்த நபர், ‘என்ன எஸ்கேப் ஆகப் பார்க்கிறியா’ எனக் கேட்டப்படியே அவரை கத்தியால் குத்துகிறார். இதனால் அவர் சரிந்து கீழே விழுகிறார்.
அருகில் இருந்த காதலியும் அவரைத் தடுக்க முயல்கிறார். ஆனால், அவரையும் குத்த முயல்கிறார். இறுதியில் அங்கிருந்து தப்பிச் செல்கிறார். இந்த காட்சிகள் அந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் ரியான், அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அதேநேரத்தில், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவருடைய இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.