ஆஸ்கர் விருதுகளுக்கான திரைப்படங்கள் எப்படித் தேர்வு செய்யப்படுகின்றன? அதைப் பெறுவதற்கு திரைக்கலைஞர்கள் ஒவ்வொருவரும் ஏன் ஏங்கிக் கிடக்கிறார்கள்? விருதைப் பெறுவதற்கு என்னென்ன உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன? என்பதை சற்றே விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.
ஐரீஷ்மேன், மேரேஜ் ஸ்டோரி, தி டூ போப்ஸ் உள்ளிட்ட ஏழு திரைப்படங்கள்; 24 ஆஸ்கர் பரிந்துரைகளைப் பெற்றிருக்கின்றன. இவையனைத்தும் ஏதோ ஒரு வகையில் சிறப்பானவை என்பதைப் போல வேறொரு ஒற்றுமையும் இவற்றுக்கு உண்டு. இவை அனைத்தும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை. இந்த ஆண்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஆஸ்கர் பரிந்துரைகளைப் பெற்றிருக்கும் நிறுவனம் இதுதான். இதை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், வால்ஸ்ட்ரீட் ஜர்னல் இதழ் அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
ஆஸ்கர் விருதுகளைப் பெறுவதற்காக சுமார் 700 கோடி ரூபாய் செலவில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரகசியமான பரப்புரையை மேற்கொண்டு வருவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஐரிஷ்மேன் திரைப்படத்துக்கு விருதுகளைப் பெறுவதற்காக அதிக அளவில் பணத்தைச் செலவிட்டு வருவதாகவும் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியிருக்கிறது. பணத்தைச் செலவிட்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுவிட முடியுமா, விருதுகள் விற்கப்படுகின்றனவா என்பன போன்ற கேள்விகள் எழக்கூடும். இவற்றுக்கு "இல்லை" என்று உறுதியாகப் பதில் கூறிவிட முடியாது.
ஆஸ்கர் விருதுகள் அனைத்தும் வாக்கெடுப்பின் மூலமாகத்தான் வழங்கப்படுகின்றன. அகாடெமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் என்ற அமைப்பு இந்த விருதுகளை வழங்குகிறது. இதில் உறுப்பினர்களாக உள்ள சுமார் 7 ஆயிரம் பேர் விருதுகளுக்காக வாக்களிக்கிறார்கள். தயாரிப்பாளர்கள், படைப்பாளிகள், இயக்குநர்கள், நடிகர்கள், படத் தொகுப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட 17 பிரிவுகள் இந்த அமைப்பில் இருக்கின்றன. ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும் 24 பிரிவுகளிலும் தகுதியான திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களை இந்த 17 பிரிவுகளாக இயங்கும் 7 ஆயிரம் பேர்தான் பரிந்துரை செய்கிறார்கள். ஒவ்வொரு பிரிவுக்கும் அந்தந்தப் பிரிவுக்கானவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.
சிறந்த படத்துக்கான விருதுக்கு மட்டும் ஒட்டுமொத்தமாக 7 ஆயிரம் பேரும் பரிந்துரை செய்யலாம். ஒவ்வொரு உறுப்பினரும் தனக்கான பிரிவுகளில் 5 திரைப்படங்கள் அல்லது கலைஞர்களை வரிசைப்படுத்தி பரிந்துரை செய்ய முடியும். இந்தப் பரிந்துரைகளில் போதுமான வாக்குகளைப் பெறுபவரின் பெயர் அல்லது பெறுகிற படம் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறும். பரிந்துரைப் பட்டியலில் இருந்து விருதுக்குத் தேர்வு செய்வதற்கு தனியாக வாக்கெடுப்பு நடக்கும். அதில் அனைத்து உறுப்பினர்களும், அனைத்துப் பிரிவுக்கும் வாக்களிக்கலாம். இந்த வாக்கெடுப்பை நடத்தும் பணியை பிரைஸ் வாட்டர் ஸ்கூப்பர்ஸ் நிறுவனம் கடந்த 80 ஆண்டுகளாகச் செய்து வருகிறது.
ஒரு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட வேண்டுமானால், அது குறைந்தது 40 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருக்க வேண்டும். ஆஸ்கர் விருது வழங்கப்படும் ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் வெளியானதாக இருக்க வேண்டும். லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு திரையரங்கில் கட்டணம் செலுத்திப் பார்க்கும் வகையில் 7 நாள்களுக்கு ஓடியிருக்க வேண்டும். வெளிநாட்டு மொழித் திரைப்படம் உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு உண்டு.
வாக்கெடுப்பு நடத்தப்படும் காலத்தில் தொடர்புடைய திரைப்படத் தயாரிப்பாளர்கள், அகாடெமி உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டுவது அனுமதிக்கப்படுகிறது. தங்களது திரைப்படங்களைப் பார்க்கச் சொல்வது, சிறப்புத் திரையிடலுக்கு அழைப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். அதனால், சிறந்த திரைப்படமாக இருந்தாலும், வலுவான பரப்புரை உத்திகள் இருந்தால்தான் ஆஸ்கர் விருதுகளை வெல்ல முடியும் என்பது எழுத்தில் இல்லாத விதி. இதைப் பயன்படுத்தித்தான் படத் தயாரிப்பு நிறுவனங்கள் விருதுகளைக் கைப்பற்றுவதாக பரவலான குற்றச்சாட்டு இருக்கிறது.
ஆதரவைத் திரட்டுவதற்காக அகாடெமியின் உறுப்பினர்களுக்கு பரிசுப் பொருள்களை வழங்குவதற்குத் தடை இருந்தாலும், ரகசியமாக இதுபோன்ற செயல்களில் படத்தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபடுவதாகக் கருதப்படுகிறது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் தொடர்பான வால்ஸ்ட்ரீட் ஜர்னலின் செய்தியும் இதுபோன்ற குற்றச்சாட்டையே மறைமுகமாக வைத்திருக்கிறது. அகாடெமி உறுப்பினர்கள் பலருக்கு திரைப்படங்களைப் பார்க்கவே நேரம் இருக்காது. கோடி கோடியாகப் பணத்தைச் செலவழிப்பதன் மூலம் அவர்களைத் தங்கள் பக்கம் இழுப்பதற்கு தயாரிப்பு நிறுவனங்கள் முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.
விருது பெறுவதால் என்ன ஆதாயம் என்ற சந்தேகம் எழலாம். ஒரு திரைப்படம் ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றாலே, திரையரங்குகள், தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றில் அதன் விற்பனை மதிப்பு பல மடங்கு உயர்ந்து விடுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். விருதைப் பெற்றுவிட்டால், இன்னும் அதிகமான லாபம் கிடைக்கும். இதற்காகவே தயாரிப்பு நிறுவனங்களை பெரும் பொருட்செலவில் பரப்புரையில் ஈடுபடுகின்றன.