நேபாளத்தில் அரசியல் சடுகுடு|கூட்டணிக்கட்சிகள் விலகல்.. ஆளும் அரசுக்கு சிக்கல்; அமைகிறது புதிய ஆட்சி!

புஷ்ப கமல் தாஹல் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணிக் கட்சியான சிபிஎன்-யுஎம்எல் திரும்பப் பெற்றதையடுத்து, அவருடைய ஆட்சி கவிழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
nepal
nepalx page
Published on

அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மையை பெறவில்லை. இதையடுத்து, சிபிஎன்-யுஎம்எல் ஆதரவுடன், சிபிஎன் மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தாஹல் என்கிற பிரசண்டா ஆட்சியமைத்ததுடன், மூன்றாவது முறையாக பிரதமராகவும் பதவியேற்றார். இந்த நிலையில், அண்மைக்காலமாக இக்கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததையடுத்து புஷ்ப கமல் தாஹல் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணிக் கட்சியான சிபிஎன்-யுஎம்எல் நேற்று திரும்பப் பெற்றது.

இதையடுத்து, நேபாள அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்தால், ஆளும் சிபிஎன் மாவோயிஸ்ட், அதிகாரத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நேபாளி காங்கிரஸ் கட்சியும், சிபிஎன்- யுஎம்எல் கட்சியும் தற்போது புதிய கூட்டணி ஆட்சி அமைக்க தீர்மானித்துள்ளதுதான் இதற்கு காரணம். தவிர, புதிய அரசு அமையும் வகையில், பிரசந்தா பதவி விலக வேண்டும் என நேபாளி காங்கிரஸ் கட்சித் தலைவா் ஷோ் பகதூா் தேவுபா வலியுறுத்தியுள்ளாா். மேலும், பிரசண்டா தலைமையிலான ஆளும் கூட்டணி அரசுக்குப் பதிலாக புதிய அரசு அமைப்பதற்காக நேபாளி காங்கிரஸ் கட்சித் தலைவா் ஷோ் பகதூா் தேவுபா, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) தலைவா் கே.பி.சா்மா ஓலி ஆகியோா் இடையே கடந்த ஜூலை 1ஆம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிக்க:மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகை ஹினா கான் வெளியிட்ட உணர்வுப்பூர்வமான வீடியோ!

nepal
கடும் பக்கவிளைவுகள்.. இந்திய ஆன்டிபயாடிக் ஊசிக்கு திடீர் தடை விதித்த நேபாளம்!

இந்த ஒப்பந்தத்தில், மீதமுள்ள ஆட்சி காலத்தில் பிரதமர் பதவியை இரு கட்சிகளும் சமமாகப் பிரித்துக்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளது. இந்த ஆண்டுகளில் பிரதமா் பதவியைப் பகிா்ந்துகொண்டு ஆட்சி நடத்துவது என நேபாளி காங்கிரஸ், சிபிஎன்-யுஎம்எல் கட்சிகள் தீா்மானித்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, முதல் கட்டமாக சிபிஎன்-யுஎம்எல் தலைவா் சா்மா ஓலி பிரதமராக இருப்பாா். அடுத்தகட்டத்தில் நேபாளி காங்கிரஸ் தலைவா் ஷோ் பகதூா் தேவுபா பிரதமா் பதவியை வகிப்பாா் என முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, பிரசந்தா தலைமையிலான அமைச்சரவையில் துணைப் பிரதமா் உள்பட 5 அமைச்சா் பதவிகளை சிபிஎன்-யுஎம்எல் கட்சி வகித்து வருகிறது. இவா்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் அளித்துள்ளனர்.

இதற்கிடையே பிரதமா் பதவியை ராஜினாமா செய்வதற்குப் பதிலாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தீா்மானத்தை எதிா்கொள்ள பிரசந்தா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

275 உறுப்பினா்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் நேபாளி காங்கிரஸ் கட்சிக்கு 89 எம்பிக்கள் உள்ளனா். சிபிஎன்-யுஎம்எல் கட்சிக்கு 78 எம்பிக்கள் உள்ளனா். பெரும்பான்மைக்கு 138 இடங்களே தேவை எனும் நிலையில், இந்தக் கூட்டணிக்கு 167 எம்பிக்கள் உள்ளனா். பிரசந்தா தலைமையிலான சிபிஎன்-மாவோயிஸ்ட் கட்சிக்கு வெறும் 32 எம்பிக்களே உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ராஜஸ்தான் | தேர்தல் தோல்வி.. பதவியை ராஜினாமா செய்த பாஜக அமைச்சர்!

nepal
”இனி இந்திப் படங்களுக்கு அனுமதியில்லை”.. ஆதிபுருஷ் பட சர்ச்சையை அடுத்து நேபாளம் அதிரடி முடிவு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com