நேபாளத்தை சேர்ந்த திருநங்கை பிங்கி என்பவர் திருநம்பி சுரேந்திர பாண்டே என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆனால் இவர்களது திருமணத்தை பதிவு செய்ய அரசு தரப்பில் முதலில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க கோரி பிங்கி - சுரேந்திர பாண்டே தம்பதி வழக்கு தொடர்ந்தனர்.
ஆனால் இதனை விசாரித்த காத்மண்டு மாவட்ட நீதிமன்றம் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க மறுத்து உத்தரவிட்டது. இதனால் பிங்கி-சுரேந்திர பாண்டேவின் திருமணத்துக்கான அங்கீகாரம், மீண்டும் மறுக்கப்பட்டது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கி நேபாள உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து மேற்கு நேபாளத்தில் உள்ள தோர்தி நகராட்சி நிர்வாகம் பிங்கி-சுரேந்திர பாண்டே தம்பதியின் தன்பாலின திருமணத்தை சட்டரீதியாக பதிவு செய்தது. திருமணத்தை பதிவு செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தன்பாலின தம்பதியினர் கூறியுள்ளனர்.