நாட்டில் உள்ள அனைவரும் உத்தமர்களா?... நவாஸ் ஷெரிஃப் ஆவேச பேச்சு

நாட்டில் உள்ள அனைவரும் உத்தமர்களா?... நவாஸ் ஷெரிஃப் ஆவேச பேச்சு
நாட்டில் உள்ள அனைவரும் உத்தமர்களா?... நவாஸ் ஷெரிஃப் ஆவேச பேச்சு
Published on

நாட்டில் உள்ள அனைவருமே வாய்மையாளர்களாகவும், நேர்மையாளர்களாகவும், உத்தமர்களாகவும் இருக்கிறார்களா என்று பனாமா கேட் ஊழல் வழக்கில் பதவி விலகிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் ஆவேசமாக பேசியுள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் பனாமா கேட் ஊழல் வழக்கில் பதவியை விட்டு விலகினார். இதைத்தொடர்ந்து அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் சார்பில் மேலிட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் கலந்து கொண்டார். நவாஸ் ஷெரிஃப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரிஃப்பை அடுத்த பிரதமராக நியமிக்க ஒருமனதாக தீர்மானம் செய்யப்பட்டது.

அப்போது அங்கு கூடியிருந்த கட்சி தலைவர்கள் மத்தியில் நவாஸ் ஷெரிஃப் ஆவேசமாக பேசியதாகக் கூறப்படுகிறது. அவர் பேசுகையில், உங்கள் தலைவராகிய என் மீது எவ்வித ஊழல் கரையும் இல்லை என்பதை எண்ணி நீங்கள் பெருமைப்பட வேண்டும். நான் யாரிடம் இருந்தும் அன்பளிப்புகளோ, லஞ்சமோ பெற்றதில்லை. என் கொள்கைகளில் என்றுமே சமரசம் செய்து கொண்டதில்லை. எனது குடும்பம் மட்டும் ஒழுங்காகவும், ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும் என்றால் எப்படி? இந்த நாட்டில் உள்ள அனைவருமே வாய்மையாளர்களாகவும், நேர்மையாளர்களாகவும், உத்தமர்களாகவும் இருக்கிறார்களா? 

நான் தவறு செய்திருந்தாலோ, இந்த நாட்டில் இருந்து எனக்கு சொந்தமில்லாததை எடுத்திருந்தாலோ எனக்கு குற்ற உணர்வு இருக்கும். எனது பணிக்காக நான் சம்பளம்கூட வாங்கியதில்லை. எனது மனசாட்சி தெளிவாக இருக்கிறது என்று ஷெரீஃப் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com