விண்கற்கள் சூரியனைச் சுற்றி வரும் மிகப்பெரிய விண்வெளிப் பாறைகள். இருப்பினும், கோள்களின் ஈர்ப்பு விசையின் காரணமாக, அவை சில சமயங்களில் கோள்களின் மீது மோதிவிடும்.
பூமியைச் சுற்றியுள்ள விண்கற்களின் செயல்பாடு சமீபத்தில் அதிகரித்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஏறக்குறைய ஒரு பெரிய விமானத்தின் அளவிலான விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் ஆகஸ்ட் 28 ஆம் தேதியான இன்று பூமியை மிக அருகில் அந்த விண்கல் நெருங்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
NEO 2022 QP3 என அழைக்கப்படும் இந்த விண்கல்லானது இந்திய நேரப்படி இரவு 9.55 மணியளவில் பூமியைக் கடந்து செல்லும் என்று நாசாவின் CNEOS தெரிவித்துள்ளது. இது 100 அடி அகலம் கொண்ட ஒரு பெரிய விண்கல் ஆகும். இந்த விண்கல் பூமிக்கு 5.51 மில்லியன் கிலோமீட்டர் தொலைவிற்கு நெருங்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க விண்வெளி ஏஜென்சியின் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் பூமியை நெருங்கும் அந்த விண்கல்லின் அளவு மற்றும் தொலைவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த விண்கல்லிற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்து, அதை “சாத்தியமான அபாயகரமான பொருளாக” அறிவித்தது. பூமியை இந்த விண்கல் 7.23 கி.மீ வேகத்தில் நெருங்கி வருவதாகவும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.