செவ்வாய் கிரகத்தில் இருந்து முதன்முதலாக காற்றின் அதிர்வலை போன்ற ஒலியை கேட்க முடிந்ததாக நாசா தெரிவித்துள்ளது
செவ்வாய் கிரகத்தின் ஆழமான உட்புறத்தை ஆய்வு செய்ய நாசாவால் வடிவமைக்கப்பட்ட முதல் ரோபோ விண்கலம் இன்சைட். இதனை கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நாசா விண்ணில் செலுத்தியது. வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட இன்சைட் விண்கலம் தனது பயணத்தை தொடர்ந்தது. 6 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், நவம்பர் 26-ஆம் தேதி இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் இருந்து ஒலியை கேட்க முடிந்ததாக நாசா தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள நாசா, முதன்முதலாக செவ்வாய் கிரகத்தில் இருந்து ஒலியைக் கேட்டுள்ளோம். இந்த ஒலியை இன்சைட் விண்கலம் பதிவு செய்து அனுப்பியுள்ளது. இது மிகச்சத்தமான ஒலியாக இல்லை. காற்றில் அதிர்வலைகள் தான். அதிர்வலைகளைதான் ஒலியாக பதிவாகியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் வடமேற்கில் இருந்து தென்கிழக்கை நோக்கி இது 10 முதல் 25 mph வேகத்தில் இந்த அதிர்வலை பதிவாகியுள்ளது. இது காற்றின் ஒலியை போலக்கேட்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய நாசாவின் புரூஷ் பெனர்ட், நாங்கள் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியுள்ள இன்சைட் அதிர்வலைகளையும், ஒலியையையும் பதிவு செய்யும் தொழில்நுட்பம் கொண்டது. இந்த மாதிரியான சின்ன சின்ன சத்தங்களும் கோள்கள் பற்றிய ஆராய்ச்சியில் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.தற்போது இன்சைட் பதிவு செய்து அனுப்பியுள்ள ஒலியை நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இது ஒரு எதிர்பாரா விருந்துதான் என்று தெரிவித்துள்ளார்.
செவ்வாயில் தரையிரங்கி ஒரு மாதக்காலத்துக்குள்ளே இன்சைட் விண்கலம் மிக முக்கியமான, அதிசயத்தக்க வேலையை செய்துள்ளதாகவும் இந்த விண்கலம் செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சிக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்