சமீபகாலமாக மாணவர்களுக்கு எதிரான சாதிய, மதரீதியான மோதல் போக்குகள் அதிகரித்துவருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் மாணவர் ஒருவர், சக மாணவர்களால் வீடு புகுந்து அரிவாளால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு முன்பாக, பாதிக்கப்பட்ட மாணவர், ’அந்தப் பள்ளிக்குப் போக மாட்டேன், சக மாணவர்கள் சாதிரீதியாக தாக்கிப் பேசுகின்றனர்’ என தன் தாயாரிடம் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இதேபோன்ற சம்பவம் பிரான்ஸிலும் அரங்கேறி உள்ளது.
பிரான்ஸின் Yvelines பகுதியைச் சேர்ந்தவர் நிக்கோலஸ். 15 வயது சிறுவனான இந்த நிக்கோலஸ், Poissy நகரில் இருந்த பள்ளி ஒன்றில் படித்து வந்தார். அப்போது, அந்தப் பள்ளியில் படித்த சக மாணவர்கள் நிக்கோலஸிடம் அடிக்கடி வம்பு இழுத்துள்ளனர். இதனால் அவர் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி, கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் தொடங்கின. அப்போது நிக்கோலஸ், அந்தப் பள்ளியிலிருந்து விடுபட்டு, பாரீஸிலுள்ள புதிய பள்ளியில் சேர்ந்திருந்தார். ஆனால், பழைய பள்ளிக்கூட அதிகாரிகள் நிக்கோலஸுக்கு நேர்ந்த துயரத்திற்கு ஆறுதல் தெரிவிக்காமல் மிரட்டல் தொனியில் கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதாவது, ‘அவதூறு பேசுவது பிரான்சில் குற்றச்செயல். அதற்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 45,000 யூரோக்கள் வரை அபராதமும் விதிக்கப்படும்’ என்று மிரட்டும் விதத்தில் கடிதம் எழுதி நிக்கோலஸ் குடும்பத்துக்கு அனுப்பியுள்ளனர். அதற்கு அவர்கள் பதில் அளித்துள்ளனர். ஆனால், அதை ஏற்காத பள்ளிக்கூட நிர்வாகம், ’தாங்கள் கூறியிருக்கும் கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஆகையால் இந்த விஷயத்தில் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளனர்.
இந்த விஷயம் நிக்கோலஸுக்கும் தெரிய வந்திருக்கிறது. தம்மால் ஏற்கெனவே குடும்பத்தில் பிரச்னை உள்ள நிலையில், தற்போதும் மீண்டும் இது விஸ்வரூபமெடுத்திருக்கிறதே என்று எண்ணிய நிக்கோலஸ், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். புதிய பள்ளியில் முதல் நாள் வகுப்புக்கு மகிழ்ச்சியுடன் சென்ற நிலையில், மறுநாள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கிருந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. அத்துடன், இந்த விஷயத்தில் ஆளும் அரசும் தலையிட்டது.
இதுகுறித்து பிரான்ஸ் கல்வித் துறை அமைச்சர் Gabriel Attal, ’அந்த மாணவனுக்கு அதிகாரிகள் அனுப்பிய கடிதம் மிகவும் வெட்கத்துக்குரிய விஷயம்’ என்று கூறியுள்ளார். மேலும் அந்த மாணவரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருப்பதுடன், இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி இரண்டு வாரங்களுக்குள் அறிகை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதுபோல் பிரான்ஸ் பிரதமரும் இந்த விஷயத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கல்விக்கூடங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு கண் திறக்கும் கூடங்களாக இருக்க வேண்டுமே தவிர, காயம்படுத்தும் சிறைக்கூடங்களாக இருக்கக்கூடாது. ஒரு சிலருக்காக, பள்ளி நிர்வாகத்தைக் காப்பாற்றவும், பணம் பறிக்கவுமே சில கல்விக்கூடங்கள் செயல்படுவதால்தான் இதுபோன்ற மாணவர்களின் கனவுகளும் எதிர்காலங்களும் சிக்கிச் சீரழிந்துபோகின்றன.