சமீபகாலமாக கொடிய வைரஸ் தொற்றுகள் மனித உயிர்களைக் காவு வாங்கி வருகிறது. இதற்கு உதாரணம் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா. இந்த தொற்றின் மூலம் உலக நாடுகள் அனைத்திலும் பல உயிர்கள் பலியாகின. தற்போது, இந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், ஆங்காங்கே இன்னும் சில இடங்களில் இதன் திரிபுகள் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இன்னும் கொடிய வைரஸ் தொற்றுகள் உதயமாகி மீண்டும் உயிர்ப்பலிகளை அதிகரிக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கென்யாவில் மர்ம நோய் (புதிய வைரஸ் தொற்று என்று கூறப்படுகிறது) ஒன்றால் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கென்யாவில் எரேகி பெண்கள் பள்ளியில்தான் இந்த கொடிய சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த நோயால் பள்ளி மாணவிகள் தங்களின் கால்களால் நடக்கும் செயலை இழந்து உள்ளனர். அவர்கள், நடக்க முடியாமல் தாங்கித் தாங்கிச் செல்வதை வீடியோ ஒன்று காட்டுகிறது. அந்த மாணவிகளுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதன் பாதிப்பால், அந்தப் பள்ளிக்கூடத்துக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. எனினும், நோய்க்கான சரியான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. கென்யா இதுகுறித்துத் தொடர்ந்து விசாரித்து வருகிறது. கடந்த 4ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகவும், அப்போது 80 மாணவிகளுக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது அதன் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது என தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் ஆய்வுக்காகக் கென்யா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
அங்கே நோயின் தன்மை மற்றும் தோற்றம் குறித்து அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரியச் சிகிச்சை தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆரம்பக்கட்ட சோதனைகளில் அந்த மாணவிகளின் உடலில் எலக்ட்ரோலைட்கள் அதிகமாக இருப்பது தெரிகிறது. இது அவர்களுக்குத் திரவ இழப்பு ஏற்பட்டதைக் காட்டுகிறது.
இந்த மர்மமான நோய்க்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இந்த நோய்ப் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது. இது மற்றவர்களுக்குப் பரவுமோ என்பது போன்ற கோணங்களில் ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.