தனது மகன் பின்லேடன் கூச்ச சுபாவம் கொண்டவர் என்றும் மூளைச்சலவை செய்து தீவிரவாதத்துக்கு திருப்பப்பட்டார் எனவும் அவரது அம்மா, அலியா கானெம் தெரிவித்துள்ளார்.
அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன். அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர். மற்றும் பல்வேறு தீவிரவாத செயல்களிலும் ஈடுபட்டுள்ள இவர், கடந்த 2011-ம் ஆண்டு, பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த போது அமெரிக்க கமாண்டோ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். செல்வச் செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்த பின் லேடன், தீவிரவாத பாதைக்குச் சென்றது எப்படி? என்பது பற்றி அவரது அம்மா இப்போது கூறியுள்ளார்.
பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டு ஏழு வருடங்கள் ஆன பிறகு அவரின் அம்மா, அலியா கானெம் (Alia Ghanem) தி கார்டியன் இதழுக்கு அளித்த பேட்டியில் அதை தெரிவித்துள்ளார். அலியா கானெமின் முதல் கணவருக்கு பிறந்தவர்தான் பின் லேடன். அவர் தந்தை விமான விபத்தில் இறந்த பின், அலியாவின் இரண்டாவது கணவர் அவரை வளர்த்தார்.
தற்போது சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வரும் அலியா கூறும்போது, ‘ இளம் வயதில் தன்னம்பிக் கை மிக்கக் குழந்தையாக இருந்தார் பின் லேடன். என் மீது அதிக அன்பு உண்டு. கூச்ச சுபாவம் உடையவர். ஆனால் தனது 20-வது வயதில் ஜெட் டாவில் உள்ள கிங் அப்துல்லாஜிஸ் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் படித்துக் கொண்டிருக்கும்போது அங்கு சிலருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. அவர்களிடமிருந்து விலகி இருக்க நான் சொன்னேன். அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் அதை அவர் விரும்பி னார். அப்துல்லா அசாம் என்பவர்தான் அவர் மனதை மாற்றி தீவிரவாதத்துக்கு அழைத்துச் சென்றார். அவர்தான் மூளை சலவை செய்து ஜிகாதியிசத்துக்கு திருப்பினார்.
1971-ல் சுவீடனில் எடுத்த புகைப்படம் ஒன்றில் ஒசாமா பின் லேடன் (வலமிருந்து 2-வது).
இதையடுத்து தனது 20 வயதிலேயே 1980-ம் வருடம் சோவியத் ரஷ்யாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் இருந்து புனிதப் போரில் ஈடுபட்டார். அப்துல்லா அசாம் பாகிஸ்தானில் வைத்துக் கொல்லப்பட்டுவிட்டார். அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்த அடுத்த 48 மணி நேரத்தில் அதற்கு காரணம் பின்லேடன் தான் என்பதை அறிந்தபோது அதிர்ச்சி அடைந்தோம். அவரை நினைத்து எங்கள் குடும்பமே அவமானப்பட்டது. கடும் விளைவுகளை சந்திக்கப் போகிறோம் என்பதை உணர்ந்தோம்’ என்று தெரிவித்துள்ளார்.