இந்தியாவின் இரண்டாம் பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி, துபாயின் பாம் ஜுமேரா தீவில் 163 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு மாளிகையை வாங்கியுள்ளார்.
முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் மும்பையில் ஆல்ட்டா மவுன்ட் சாலையில் அமைந்திருக்கும் அன்டிலியாவில் (குடியிருப்பு) வசிக்கிறார். தற்போது துபாயில் 163 மில்லியன் டாலரில் வாங்கியிருப்பது தான் பாம் ஜுமேரா வர்த்தக வரலாற்றில் உச்ச அளவாகும். தற்போதைய நிலவரப்படி துபாயில் அம்பானி வாங்கி இருக்கும் வீடு தான் விலையுயர்ந்த வீடு. துபாயில் நகர புற ரியல் எஸ்டேட், கொரோனாவுக்கு பிறகு தற்போது தான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளதாக துபாய் அரசு தெரிவிக்கிறது.
குவைத் தொழிலதிபர் அதிபர் முகமது அல்ஷாயாவின் குடும்பத்திடமிருந்து அம்பானி சொத்தினை வாங்கியதாக கூறப்படுகிறது. 84 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளை வைத்துள்ள முகேஷ் அம்பானி, தனது இளையமகன் ஆனந்துக்காக 80 மில்லியன் டாலர் மதிப்பிலான சொகுசு வீட்டினை சமீபத்தில் வாங்கினார். மேலும் பிரிட்டன் நாட்டில் இருக்கும் பக்கிங்ஹாம்ஷைர் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் ஸ்டோக் பார்க்-ஐ 592 கோடி ரூபாய்க்கு வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது முகேஷ் அம்பானி வீடு வாங்கி இருக்கும் பாம் ஜுமேரா தீவு இயற்கையான தீவு போல் அழகாக காட்சியளிக்கும். ஆனால் அது இயற்கையாக உருவான நிலப்பரப்பு அல்ல. இது கடலில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை தீவு. சமீபத்திய காலமாக உலகின் மிகப்பெரிய பணக்காரர்களும், பிரபலங்களும் இங்கு வீடுகளை வாங்கி வருகின்றனர். மேலும் இந்தியர்கள் பலர் துபாயில் ரியல் எஸ்டேட்டில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மக்கள் தொகையில் 70% வெளிநாட்டவர்களின் முதலீட்டு தான் நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய வங்கு வகிக்கிறது. தற்போது அம்பானி அங்கு வீடு வாங்கியுள்ளதால் துபாய் ரியல் எஸ்டேட் இந்தியர்களிடம் மேலும் பிரபலமடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.