வறுமை, பாலினப் பாகுபாடு, உள்நாட்டு சண்டை உள்ளிட்ட காரணங்களால் உலகம் முழுவதும் சுமார் 120 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த சர்வதேச அமைப்பான 'சேவ் த சில்ட்ரன்' அண்மையில் நடத்திய ஆய்வில் 40 நாடுகளில் குழந்தைகளின் நிலைமை படுமோசமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. உள்நாட்டு சண்டை, வறுமை, பாலின சமன்பாடின்மை என இவற்றில் ஏதேனும் ஒரு பிரச்னையில் சிக்கி சுமார் 129 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த மூன்று பிரச்னையிலும் சிக்கி சுமார் 15.3 கோடி குழந்தைகள் அவதிப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. சர்வதேச குழந்தைகள் தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், உலகம் முழுவதும் குழந்தைகளின் நிலைமை குறித்து வெளியான இந்த ஆய்வறிக்கை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2030 ஆம் ஆண்டுக்குள் குழந்தைகளின் வாழ்க்கை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை ஐ.நா எடுக்க வேண்டும் என அந்த அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் குழந்தைகளின் உடல் நலம், கல்வி, சுதந்திரம், பாதுகாப்பு ஆகியவை படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்ததாக, அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. எனவே இந்த நிலையை மாற்ற குழந்தை திருமணத்தை தடுப்பது, குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது உள்ளிட்ட 10 முக்கியமான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.