“30க்கும் மேற்பட்ட உடைந்த எலும்புகள் சரியாகி வலுவடையும்” என விபத்தில் சிக்கிய ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
‘அவெஞ்சர்ஸ்’ படம் மூலம் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றவர் ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னர். இவர், கடந்த புத்தாண்டுத் தினமான ஜனவரி 1ஆம் தேதி, அவருடைய சொந்த வீடு உள்ள வாஷோ மாவட்டத்துக்கு தன்னுடைய காரில் புறப்பட்டுச் சென்றபோது, கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதில், அவரது கார் விபத்தில் சிக்கியது.
இதில் படுகாயமடைந்த அவர், அப்பகுதி மக்களால் உடனடியாக மீட்கப்பட்டு விமானம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘ரென்னருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. என்றாலும், அவர் இன்னும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே உள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஜெர்மி ரென்னர், ‘எனக்காக பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் நன்றி’ எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தன்னுடைய உடல்நிலை குறித்தான புதிய அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார், ரென்னர். தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இதுகுறித்து நேற்று வெளியிட்டிருக்கும் பதிவில், “அதிகாலை உடற்பயிற்சி, புத்தாண்டு தீர்மானங்கள் என அனைத்தும் இந்த புத்தாண்டில் மாறிவிட்டன.
என்னுடைய குடும்பத்திற்கு சோகத்தை உண்டாக்கிய இந்த மோசமான சம்பவத்தில் இருந்து நான் விடுபட்டு இருக்கிறேன். விரைவாக குடும்பத்தினருடன் அன்பை ஒங்கிணைக்கும் பணியில் கவனம் செலுத்துவேன். எனக்கும், என்னுடைய குடும்பத்திற்கும் நீங்கள் அனுப்பிய வார்த்தைகளுக்கு என்னுடைய நன்றி. மேலும் உங்களுக்கு அன்பையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குடும்பம் மற்றும் நண்பர்களுடனான அன்பும் பிணைப்பும் ஆழமடைவதைப் போலவே, இந்த 30க்கும் மேற்பட்ட உடைந்த எலும்புகள் சரியாகி வலுவடையும். உங்கள் அனைவருக்கும் அன்பும் ஆசிகளும்” என்று பதிவிட்டு, மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளார்.
- ஜெ.பிரகாஷ்