டைட்டானிக் கப்பலை காண சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயம்: ‘இன்னும் 30 மணி நேரத்துக்கு தான் ஆக்சிஜன்..’

மாயமான நீர்மூழ்கிக் கப்பலில் 70 - 96 மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் இருக்கலாமென சொல்லப்பட்ட நிலையில், அதில் வெறும் 30 மணி நேரத்துக்கு தேவையான ஆக்சிஜன் மட்டுமே இப்போது எஞ்சியிருக்குமென சொல்லப்படுகிறது
Missing Titanic sub
Missing Titanic sub Twitter
Published on

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிக் 1912-ம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் பனிமலையில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த 1,500 பேர் பலியாகினர். பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்கு பின்னர் 1985-ம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்து 400 மைல் தென்கிழக்கே நியூபவுன்ட்லாண்ட் தீவு அருகே கடலுக்கு அடியில் 4 கிலோமீட்டர் ஆழத்தில் சிதைந்து போயிருந்த அக்கப்பலின் முன்பாகம் கண்டறியப்பட்டது.

Missing Titanic sub
Missing Titanic sub

இதைத்தொடர்ந்து அந்த இடம், சுற்றுலா பயணிகளும் பார்வையிடும் வகையில் பாதுகாப்பாக மாற்றப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த OceanGate Expeditions என்ற ஆழ்கடல் பயணங்களை ஏற்பாடு செய்யும் தனியார் நிறுவனம், தனது நீர்மூழ்கி கப்பலில் சுற்றுலா பயணிகளை இந்த இடத்துக்கு அழைத்துச்செல்லும் வாடிக்கையை கொண்டிருந்தது.

டைட்டானிக் கப்பல் - நீர்மூழ்கி கப்பல்
டைட்டானிக் கப்பல் - நீர்மூழ்கி கப்பல்

அதன்படி இந்நிறுவனத்துக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் ஒன்று டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தைப் பார்வையிட சில சுற்றுலாப் பயணிகளை சமீபத்தில் (கடந்த ஞாயிறு) அழைத்துச் சென்றது. இந்நிலையில் இந்த நீர்மூழ்கி கப்பல் புறப்பட்ட சில நேரத்திலேயே அட்லாண்டிக் கடலில் திடீரென மாயமாகி விட்டதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. நீர்மூழ்கிக் கப்பல் கிளம்பிய ஒரு மணி நேரம் மற்றும் 45 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை சம்பந்தப்பட்ட OceanGate Expeditions நிறுவனமும் உறுதிபடுத்தி உள்ளது.

இதையடுத்து நியூ பவுண்ட் லேண்ட் கடல் பகுதியில் காணாமல்போன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாயமான நீர்மூழ்கி கப்பலில் அவசர காலத்தின்போது 90 மணி நேரம் உயிர்வாழ உதவும் அளவுக்கான ஆக்சிஜன் உள்ளதென தொடக்கத்தில் சொல்லப்பட்டது. இது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த நிலையில், திங்கள்கிழமை இரவு கணிப்பின்படி அளவு இதன் அளவு 70 - 96 மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் என்று மாறியிருக்கும் என கூறப்பட்டது. இது தற்போது (செவ்வாய்க்கிழமை இரவு) 30 - 40 அளவிலோ, அல்லது 30-க்கும் குறைவாகவோ ஆகியிருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. கடலோர காவல்படையினர் இதை கணித்துள்ளனர்.

நீர்மூழ்கி கப்பல்
நீர்மூழ்கி கப்பல்

இதனால் சிக்னல் துண்டிக்கப்பட்ட இடத்தை சுற்றித் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நீர்மூழ்கிக் கப்பலில் 3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட் மற்றும் டூர் ஆபரேட்டர் நிறுவன அதிகாரி ஒருவர் என மொத்தம் 5 பேர் உள்ளனர். அவர்களின் நிலை என்ன ஆனது என்பது குறித்தும் தெரியவில்லை. நீர்மூழ்கிக் கப்பலில் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான அனைத்து வழிகளும் ஆராயப்பட்டு வருவதாக சம்பந்தப்பட்ட OceanGate Expeditions நிறுவனம் தெரிவித்துள்ளது.

Titanic
Titanic

டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கிடக்கும் இடம் கடலின் மேற்பரப்பிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ளது. கடலின் மேற்பரப்பிலிருந்து இங்கு சென்றடைய சுமார் 8 மணி நேரம் ஆகும். நீர்மூழ்கிக் கப்பல் கடலில் சரியாக எந்த இடத்தில் உள்ளது என்பது குறித்து தெளிவான தகவல் இல்லாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நியூ பவுண்ட் லேண்ட் கடல் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்துவது சவாலானது என ஆராய்ச்சியாளர்கள் கூறுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தைப் பார்வையிடுவதற்காக 8 நாள் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் நியூபவுண்ட்லேண்ட் பகுதியில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடலுக்கு இந்த நீர்மூழ்கிக் கப்பல் புறப்பட்டுள்ளது. இக்கப்பலில் பைலட் உள்பட மொத்தமே 5 பேர் மட்டுமே பயணிக்க முடியும். ஒரு நபருக்கான கட்டணம் இரண்டரை லட்சம் டாலர் என சொல்லப்படுகிறது.

நீர்மூழ்கி கப்பலில் பயணித்தவர்கள்
நீர்மூழ்கி கப்பலில் பயணித்தவர்கள்

அட்லாண்டிக் கடலில் ஆழத்தில் உள்ள டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்க்க சென்ற சுற்றுலா நீர்மூழ்கி கப்பல், கடலில் மாயமான சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com