காணாமல் போனதாகக் கருதப்பட்ட நபர் ஒருவர் மீனவர் பிடித்த சுறா மீனின் வயிற்றில் இருந்துள்ளது அர்ஜென்டினா நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவர் 32 வயதான டியாகோ பரியா. இவர், கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி, தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளிடம் தெற்குப் பிராந்தியத்தில் உள்ள சுபிட் கடற்கரைக்குச் செல்வதாகச் சொல்லி க்வாட் பைக்கில் சென்றுள்ளார். ஆனால், அதற்குப் பிறகு அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை.
இதையடுத்து குடும்பத்தினர் போலீஸில் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், கடற்கரையில் அவருடைய சேதமடைந்த வாகனத்தையும், ஹெல்மெட்டையும் மீட்டனர்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி, சுபிட் கடற்கரையில் மீனவர் வலையில் சுறா மீன் ஒன்று சிக்கியுள்ளது. அதனைச் சுத்தம் செய்யும்போது அதன் வயிற்றுப் பகுதியில்,மனித உடலின் பாகங்கள் (எச்சங்கள்) இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து அந்த மீனவர் ஊடகங்களிடம் தெரிவித்த நிலையில், பரியாவின் குடும்பத்தினர், அந்த மனித உடலின் எச்சத்தைப் பார்வையிட்டுள்ளனர்.
அதில், சுறாவின் வயிற்றுப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மனித கை பாகத்தில் இருந்த டாட்டூவை பார்த்துவிட்டு, அது தன் கணவர்தான் என உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் இறுதி முடிவு டிஎன்ஏ சோதனைக்கு பிறகுதான் தெரியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- ஜெ.பிரகாஷ்