சோவியத் சோசலிச ஐக்கிய ஒன்றியத்தின் கடைசி தலைவரான மிக்கைல் கோர்பசேவ் நேற்றைய தினம் உயிரிழந்திருக்கிறார். அவருக்கு வயது 91.
20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், லெனின் தலைமையிலான ரஷ்ய புரட்சியால் உருவானது சோவியத் ஒன்றியம். அப்படி லெனின் தலைமையில் உருவான சோவியத் ஒன்றியத்தில், கடைசி தலைவராக இருந்தவர்தான் இந்த மிக்கைல் கோர்பசேவ்.
1985 முதல் 1991-ம் ஆண்டு வரை சோவியத் யூனியனின் தலைவராக இருந்த மிக்கைல் கோர்பசேவ், அது கலைக்கப்படும் வரை தலைவராக இருந்தார். தலைவராக இருந்த போது, இவர் கொண்டு வந்த சிறந்த நிர்வாகத்தால்தான் பனிப்போர் முடிவுக்கு வந்தது. இந்த காலக்கட்டத்தில்தான் பத்திரிகைகளுக்கும் கலாச்சார சுதந்திரம் வழங்கப்பட்டது. 1990-ம் ஆண்டு, இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
குடிமக்களுக்குச் சுதந்திரம் அளிக்க, ஜனநாயகக் கொள்கைகளின்படி கம்யூனிச ஆட்சியை அமைக்க சீர்திருத்த விரும்பியவர் மிக்கைல். சொல்லப்போனால் மிக்கைல் கோர்பசேவ் அங்கு கொண்டு வந்த மிகப் பெரிய சீர்திருத்தங்களினால்தான், அதுவரை ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த குடியரசு நாடுகளுக்கு சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட்டது.
இதனாலேயே, சோவியத் குடியரசின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிந்து செல்ல வழி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சோவியத் யூனியன் கலைக்கப்படுவதற்கான தீர்மானத்தில் ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் நாடுகள் உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திட்டன. பின்னர் படிப்படியாக சோவியத் அமைப்பில் இருந்த அனைத்து நாடுகளும் பிரிந்து 1996 ஆம் ஆண்டில் தனி தனி நாடுகளாயின.